/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 கிலோ குப்பையா... மறுசுழற்சி செய்யணும்! நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
/
100 கிலோ குப்பையா... மறுசுழற்சி செய்யணும்! நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
100 கிலோ குப்பையா... மறுசுழற்சி செய்யணும்! நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
100 கிலோ குப்பையா... மறுசுழற்சி செய்யணும்! நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
ADDED : மே 10, 2025 02:55 AM
பொள்ளாச்சி : ஒரே வளாகத்தில், தினமும், 100 கிலோவுக்கும் அதிகமாக குப்பை உருவாக்கினால், அந்த நிர்வாகமே, குப்பையை மறுசுழற்சி செய்து கொள்ள நகராட்சி சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
பொள்ளாச்சி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திடக்கழிவுகளை அப்புறப்படுத்த வீடுகள் தோறும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. குடியிருப்புவாசிகள் திறந்தவெளியில் குப்பைக் கொட்டுவதை தவிர்த்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
அதேநேரம், ஒரே வளாகத்தில், தினமும், 100 கிலோவுக்கும் அதிகமாக குப்பை உருவாக்கினால், அந்த நிர்வாகமே குப்பையை மறுசுழற்சி செய்து கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதியின் படி, நாள் ஒன்றுக்கு, 100 கிலோவுக்கும் அதிகமாக குப்பை உருவாக்கும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் குப்பையை, நகராட்சி வசம் ஒப்படைக்கக் கூடாது. அந்தந்த நிறுவனங்களே, குப்பையை மறு சுழற்சி செய்யவோ, உரம் தயாரிக்கவோ வேண்டும். ஆனால், பல நிறுவனங்கள், 100 கிலோவுக்கு அதிகமாக குப்பை சேகரமானாலும், மறுசுழற்சி செய்வதற்கு முனைப்பு காட்டுவதில்லை. மாறாக, நகராட்சி சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கவே முற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திடக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, மின்னணுக்கழிவு, மருத்துவக்கழிவு, கட்டடக்கழிவு என, குப்பை மேலாண்மைக்கான ஆறு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. எனவே, குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, குப்பையை வகைப் பிரித்து அளிப்பதும், அவற்றை மறுசுழற்சி மற்றும் மட்கச் செய்தல் வேண்டும். குப்பையை வகை பிரித்து அளிக்க வேண்டும்.
மாறாக, 100 கிலோவுக்கு அதிகமான குப்பை சேகரமாகும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம், மறு சுழற்சி செய்யவும், உரம் தயாரிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. அந்த குப்பையை வேறு எங்கும் கொட்டாதவாறு, கண்காணிப்பும் செய்யப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.