/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு நிதி உதவி 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு
/
மாணவர்களுக்கு நிதி உதவி 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ADDED : அக் 21, 2025 10:43 PM
கோவை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின், தந்தை அல்லது தாய் விபத்தில் உயிரிழந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அம்மாணவர்களுக்கு, அரசு சார்பில் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50,000 அல்லது ரூ.75,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த தொகை, அரசு நிதி நிறுவனங்களில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வு தொகையை, மாணவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பிற்காக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் (2025-2026), ரூ.11 கோடி 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, இதுவரை மாநிலம் முழுவதும் 810 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்காக ரூ.5 கோடி 94 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் ரூ.5 கோடி 23 லட்சம் நிதி, மீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை, உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.