/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வு எழுதும் 1.12 லட்சம் பேர்
/
பொதுத்தேர்வு எழுதும் 1.12 லட்சம் பேர்
ADDED : பிப் 10, 2025 10:56 PM
கோவை; கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வை, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 96 பேர் எழுதவுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ், 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ்2 பொதுத்தேர்வு வரும் மார்ச், 3 முதல், 25ம் தேதி வரையும், பிளஸ்1 வகுப்புக்கு மார்ச், 5 முதல், 27ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு மார்ச், 28 முதல் ஏப்., 15ம் தேதி வரையும் நடக்கிறது.
முன்னதாக செய்முறை தேர்வானது, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு கடந்த, 7ம் தேதி துவங்கியது. வரும், 14ம் தேதி வரை ஒரு பிரிவாகவும், 15 முதல், 21ம் தேதி வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடக்கிறது.
பத்தாம் வகுப்புக்கு வரும், 22 முதல், 28ம் தேதி வரையும் நடக்கிறது. பொதுத் தேர்வை பொறுத்தவரை, பத்தாம் வகுப்பில், 39 ஆயிரத்து, 433 மாணவர்களும், பிளஸ்1 வகுப்பில், 36 ஆயிரத்து, 664 மாணவர்கள், பிளஸ்2 தேர்வை, 35 ஆயிரத்து, 999 மாணவர்கள் என, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 96 பேர் எழுதஉள்ளனர்.
காலை, 10:00 மணிக்கு துவங்கி மதியம், 1:15 மணிக்கு தேர்வு முடிவடைகிறது. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு, 122 மையங்களிலும், பத்தாம் வகுப்புக்கு, 157 மையங்களிலும் தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவுகளானது, பிளஸ்2 வகுப்புக்கு மே 9ம் தேதியும், பிளஸ்1 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு மே, 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.