/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இருந்து 1,295 சிறப்பு பஸ்கள்
/
கோவையில் இருந்து 1,295 சிறப்பு பஸ்கள்
ADDED : அக் 25, 2024 06:55 AM

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை கோட்டத்தில் இருந்து, 1,295 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளியை முன்னிட்டு, வரும், 28 முதல், 31 வரை நான்கு நாட்கள் மாநிலம் முழுதும், 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் குறித்து கோவை கோட்ட அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில், திருப்பூரில் இருந்து மதுரைக்கு, 110, திருச்சிக்கு, 170, தேனிக்கு, 40 பஸ்கள்; ஈரோட்டில் இருந்து மதுரை மற்றும் திருச்சிக்கு தலா, 60 என, 120 பஸ்கள்; கோவையில் இருந்து மதுரைக்கு, 210, திருச்சிக்கு, 180, தேனிக்கு, 160, சேலத்துக்கு, 240, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப தேவைப்படும் பகுதிக்கு இயக்க, 65 பஸ்கள் என மொத்தம், 1,295 பஸ்கள் இயக்குவதென முடிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'வரும் 29ம் தேதி இரவு துவங்கி, 30ம் தேதி நாள் முழுதும், 70 சதவீதம் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். சிறப்பு பஸ்களின் இயக்கத்துக்கென கண்காணிப்பு, செயல்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நெரிசலுக்கு ஏற்ப உள்ளூர் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து, வெளியூர் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை தேவைப்படும் போது அதிகரிக்கப்படும். சிறப்பு பஸ்கள் இயக்கம், கட்டணம் குறித்து ஏதேனும் புகார் இருந்தால், பயணிகள், 94450 14436 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்,' என்றனர்.