ADDED : செப் 07, 2026 09:17 PM
மேட்டுப்பாளையம்: சிக்காரம்பாளையத்தில் நடந்த சிறப்பு கால்நடை முகாமில், 1,325 கால்நடைகளுக்கு சொட்டு மருந்து மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காரமடையை அடுத்த சிக்காரம்பாளையத்தில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மேட்டுப்பாளையம் கால்நடை டாக்டர் சரவணன் முகாமை துவக்கி வைத்து, கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலட்டு தன்மை நீக்கம், கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. பசு மாடுகளுக்கு சினை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகளுக்கு தீவனப் பயிர் வளர்ப்பு, பறவைக் காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். முகாமில், 135 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சையும், 780 மேற்பட்ட கால்நடைகளுக்கு குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. 60 செல்ல பிராணிகளுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மொத்தமாக , 1325 கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாம் நிறைவில், சிறந்த கலப்பின கிடாரிக்கன்றுகளை வளர்த்தவர்களுக்கும், முன்னோடி கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை உதவி டாக்டர்கள் வேடியப்பன், கவிதா, சிவகுருநாதன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
