ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 05, 2026 08:07 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில், 2021 - 25ம் ஆண்டு மாணவர்களுக்கு, 14வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
கல்லூரி முதல்வர் சுதா பேசுகையில், கல்லூரி வளர்ச்சி, நவீன உட்கட்டமைப்பு வசதிகள், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மாணவர்களுக்கான பயிற்சி, வேலைவாய்ப்பு, எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த திட்டங்களை தெரிவித்தார்.
'காக்னிசன்ட்' நிறுவனத்தின் வளாக வேலைவாய்ப்புத் துறை தலைவர் சுமீத் நாயக், மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
ஏ.ஐ., தொழில்நுட்பம் உலகளவில், தொழில்துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒருபோதும் நிற்காத தொடர்ச்சியான பயணம்.
ஏ.ஐ., பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு துறைகளில் பணிகளின் தன்மை வேகமாக மாறி வருகிறது. வழக்கமாக மனிதர்கள் மேற்கொண்டு வந்த பணிகளை, ஏ.ஐ., சார்ந்த தொழில்நுட்பங்கள் மேற்கொள்வதால், வேலைவாய்ப்புகளின் வடிவம் மாற்றமடைந்து வருகிறது. அதற்கேற்ப திறன்களையும், அறிவையும் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, பேசினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி தலைவர் மோகன்ராம், இயக்குனர் ராஜாராம், கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில், 770 மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டம் வழங்கப்பட்டது.
