/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
19 ஆண்டுகள் தாமதத்துக்கு விரைவில் தீர்வு
/
19 ஆண்டுகள் தாமதத்துக்கு விரைவில் தீர்வு
ADDED : மே 04, 2025 10:32 PM

கோவை, ; நீலிக்கோணாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பாலப் பணிக்கான டெண்டர் பரிசீலனை செய்யும் பணி, மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இம்மேம்பாலங்கள் கட்டப்படும் பட்சத்தில், 19 ஆண்டு கால தாமதத்துக்கு தீர்வு கிடைக்கும்.
கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, 2006ல், முன்னாள் முதல்வர் கருணாநிதி மேம்பாலங்கள் கட்டும் திட்டத்தை அறிவித்தார். ஈச்சனாரி, நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதுார், வெள்ளலுார், வாலாங்குளத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
காந்திபுரம் மற்றும் ஆவராம்பாளையம், பீளமேடு பாலங்கள், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டன. எச்.ஐ.எச்.எஸ்., காலனி, அவிநாசி ரோடு - தண்ணீர் பந்தல், நீலிக்கோணாம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படாமல் இருந்தன.
கடந்த, 2021ல் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், எச்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, நிலம் கையகப்படுத்தி, தற்போது பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல், நீலிக்கோணாம்பாளையம், அவிநாசி ரோடு - தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பால திட்டங்கள் துாசி தட்டப்பட்டன.
நீலிக்கோணாம்பாளையத்தில், 26 கண்களுடன், 670 மீட்டர் நீளத்துக்கு, 8.5 மீட்டர் அகலத்துக்கு இரு வழிச்சாலையாக, மேம்பாலம் அமைய இருக்கிறது. முதலில், 330 மீட்டர் நீளத்துக்கு அணுகுசாலை அமைக்கப்படும். இரண்டாம் கட்டமாக, 1,300 மீட்டர் நீளத்துக்கு அணுகுசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம், 20.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருக்கிறது.
இதேபோல், அவிநாசி ரோடு (ஹோப் காலேஜ்) - தண்ணீர் பந்தல் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (கிராம சாலைகள்) துவங்க இருக்கிறது.
இப்பாலம், 8.50 மீட்டர் அகலத்தில், 549.14 மீட்டர் நீளத்துக்கு அமைய உள்ளது. மொத்தம், 17 கண்கள் அமையும்.
அவிநாசி சாலை பக்கம் - 137.52 மீட்டர் நீளத்துக்கும், தண்ணீர் பந்தல் பக்கம் - 68.42 மீட்டர் நீளத்துக்கும் அணுகுசாலை அமைய உள்ளது. மேம்பாலம் மட்டும் கட்டுவதற்கு, 16 கோடி ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு மேம்பாலங்களுக்கும் டெண்டர் கோரப்பட்டு, பரிசீலனையில் உள்ளது.
இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை (கிராம சாலைகள்) அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நீலிக்கோணாம்பாளையம், அவிநாசி ரோடு - தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டது.
பெறப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை பரிசீலிக்கும் பணி நடந்து வருகிறது. டெண்டர் இறுதி செய்யப்பட்டதும், 'ஒர்க் ஆர்டர்' வழங்கி, பணிகள் துவக்கப்படும். தற்போதுள்ள இடத்தில் மேம்பாலங்கள் கட்டப்படும்' என்றனர்.