/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 புதிய பயிர் ரகங்கள், 7 மேலாண்மை தொழில்நுட்பங்கள்! வேளாண் பல்கலையில் 4 நாள் உழவர் விழா துவங்கியது
/
24 புதிய பயிர் ரகங்கள், 7 மேலாண்மை தொழில்நுட்பங்கள்! வேளாண் பல்கலையில் 4 நாள் உழவர் விழா துவங்கியது
24 புதிய பயிர் ரகங்கள், 7 மேலாண்மை தொழில்நுட்பங்கள்! வேளாண் பல்கலையில் 4 நாள் உழவர் விழா துவங்கியது
24 புதிய பயிர் ரகங்கள், 7 மேலாண்மை தொழில்நுட்பங்கள்! வேளாண் பல்கலையில் 4 நாள் உழவர் விழா துவங்கியது
ADDED : செப் 27, 2024 06:35 AM

கோவை : ''நடப்பாண்டு, 24 புதிய பயிர் ரகங்கள், 7 மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் 5 பண்ணைக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளோம்,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், நான்கு நாட்கள் நடக்கும் மாநில அளவிலான மாபெரும் உழவர் தினவிழா, நேற்று துவங்கியது.
புதிய பயிர் ரகங்கள் மற்றும் செயல் விளக்கத் திடலை வேளாண் - உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், பொள்ளாச்சி எம்.பி.,ஈஸ்வரசாமி ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
உணவு உற்பத்தி அதிகரிப்பு
விழாவில், அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழக அரசு, வேளாண்மைக்கென தனி நிதி அறிக்கையை தயார் செய்து, சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனை பேணிக் காத்திட, பல அரிய திட்டங்கள், வேளண் - உழவர் நலத்துறையால், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல்வர், தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக, 2020-21ல் 152 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 2022-23ம் ஆண்டில், 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2022-23ம் ஆண்டில், தமிழக உணவு தானிய உற்பத்தி 117 லட்சம் மெட்ரிக் டன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளது.
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கடந்த மூன்று ஆண்டுகளில் 7,705 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை, 23 ஆயிரத்து 237 ஏக்கர் பரப்பில் வேளாண் பயிர்களும், 3,587 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் நடப்பட்டு, தரிசு நிலங்கள் நிரந்தர சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
விவசாயிகள், தமிழ் மண்வளம் இணையதளம் வழியாக, மண் வள அட்டைகளை பதிவிறக்கம் செய்து, தாங்கள் தேர்வு செய்துள்ள பயிர்களுக்கேற்ப, உரப் பரிந்துரைகளையும் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
தென்னை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை, உரிய நேரத்தில் குறித்த அளவில் அளிப்பதால், தென்னையில் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்பதை எடுத்துக் காட்டும் வகையில், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் செயல்விளக்கத் திடங்கள் அமைக்கப்படும்.
நடப்பாண்டு, 24 புதிய பயிர் ரகங்கள், 7 மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் 5 பண்ணைக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளோம். இந்தியாவில் முதன் முறையாக, ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் இடுபொருட்களை தெளிக்கும் செயல்முறைகளை, ஏழு முக்கிய பயிர்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் வடிவமைத்துள்ளது.
பல்கலையின் இடுபொருட்கள் மற்றும் விதைகளை ஆன்லைன் வாயிலாக வாங்க TNAU Agricart என்ற இணையதளத்தை உருவாக்கி, உழவர்களுக்கு வீடுகளுக்கே விதைகள் மற்றும் இடுபொருட்களை வினியோகம் செய்து வருகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
விவசாயிகள் மீது அக்கறை
அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். பெரும்பகுதி விவசாயிகளுக்கு பயன்பட்டு வருகிறது. விவசாயிகளின் மீது இருக்கும் அக்கறையால் தான், வேளாண்மை துறையின் சார்பாக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. துறையின் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்,'' என்றார்.
புது தொழில்நுட்பம் தேவை
அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறோம். இயற்கை சார்ந்த தொழிலாக விவசாயம் உள்ளதால், பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் உட்பட பல்வேறு காரணிகளில் இருந்து, பயிர்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. 'நபார்டு' வங்கியின் தலைமை பொது மேலாளர், விவசாயம் மேம்பட நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம் என்று சொல்லியிருப்பது, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது,' என்றார்.
112 வேளாண் உற்பத்தி குழு
பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், ''உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மேலும் திறம்பட செயல்பட வேண்டும் என்ற நோக்கில், இப்பல்கலைக் கழகம், 112 வேளாண் உற்பத்தியாளர் குழுக்களை தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு தேவைப்படும் ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பிற சேவைகளை வழங்கி வருகிறது.
வேளாண் பல்கலைக் கழகத்தின் 'கிசான் கால் சென்டர்' வாயிலாக, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 148 விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் வாயிலாக பயிர்களில் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள், வேளாண் பல்கலை கண்டறிந்துள்ளது,'' என்றார்.