UPDATED : அக் 08, 2026 07:26 PM
ADDED : அக் 08, 2026 07:06 PM

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. மழையுடன் காற்றும் சுழன்று சுழன்று அடித்தது. அன்னூர் வட்டாரத்தில் 2,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நேந்திரன், கதலி, ரோபஸ்டோ ரக வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. இவை தற்போது வெட்டி விற்பனை செய்ய, தயார் நிலையில் உள்ளன.
நேற்றுமுன்தினம் வீசிய சுழல் காற்றில் சொக்கம்பாளையம், குமாரபாளையம், காக்காபாளையம், கதவுகரை உள்ளிட்ட அன்னூரின் தெற்கு பகுதியில் 5,000 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
சொக்கம்பாளையம் விவசாயிகள் கூறியதாவது:
'ஒரே தோட்டத்தில் 400 வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவை ஓரிரு வாரங்களில் வெட்டுக்கு தயாரான நிலையில் இருந்தன.
ஒவ்வொரு வாழைத்தாரும் 15 முதல் 18 கிலோ எடை உள்ளது. தற்போது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
முறிந்து விழுந்த வாழைத்தார்களை அப்புறப்படுத்துவதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவாகும். இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். அரசு கள ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
