/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்கு 750 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை
/
தீபாவளிக்கு 750 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை
தீபாவளிக்கு 750 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை
தீபாவளிக்கு 750 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை
ADDED : அக் 16, 2025 08:57 PM
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து, 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு தினங்களே உள்ளன. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால், ரயில்கள், பஸ்களில் அதிகளவு கூட்டம் உள்ளது.
பயணிகளின் வசதிக்காக கோவை கோட்டத்தில் இருந்து நான்கு நாட்கள், 2,695 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கோவையில் இருந்து மட்டும், 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பஸ்கள், இன்று முதல், வரும், 20ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.
கோவை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து மதுரை, தேனி, மற்றும் தென்மாவட்டங்களுக்கும், சூலுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடிக்கும், சாய்பாபா காலனி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து ஊட்டி, குன்னுார், கூடலுாருக்கும், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலத்துக்கும், உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கொடிசியா மைதானத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.
கோவை - மதுரைக்கு, 200, கோவை - திருச்சிக்கு, 200, கோவை - தேனிக்கு, 100, கோவை - சேலத்துக்கு, 250 என, மொத்தம், 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பஸ்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள, 94425 01920 என்ற எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை கலெக்டர் பவன்குமார் கூறுகையில்,''வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அவ்வாறு வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பஸ் டிப்போக்களில் இருந்து பயணிகளை ஏற்றக் கூடாது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் புறப்படும் இடங்களுக்கு டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, பெங்களூரு செல்லும் ஆம்னி பஸ்கள், அவிநாசி ரோடு வழியாகவும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள், சின்னியம்பாளையம், நீலாம்பூர் கொச்சி பை-பாஸ் வழியாக திருச்சி ரோடு வழியாக செல்ல வேண்டும்,'' என்றார்.