/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
79 நிமிடம் சிலம்பம் சுற்றி சிறுவன் அசத்தல்
/
79 நிமிடம் சிலம்பம் சுற்றி சிறுவன் அசத்தல்
ADDED : நவ 13, 2025 09:40 PM

மேட்டுப்பாளையம்:
79 நிமிடம் விடாமல் சிலம்பம் சுற்றி 8 வயது பள்ளி சிறுவன் சாதனை புரிந்தார்.
கோவை வீரபாண்டி பிரிவையை சேர்ந்தவர் சந்திரன் ஆசான். 83 வயதான இவர் சுமார் 60 ஆண்டுகளாக அதே பகுதியில் வீர மாருதி உடற்பயிற்சி சாலையின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பாட்டம், குருவடி, கைப்போர்,வால், ஈட்டி, கேடயம், குஸ்தி என பல வகையான கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக, அதே பகுதியை சேர்ந்த தருண் குமார் என்ற 8 வயது பள்ளி சிறுவன், சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறார்.
இச்சிறுவன் அண்மையில் குன்னுாரில் நடைபெற்ற கலாம்ஸ் சிலம்பாட்டம் போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு, போட்டிகளில், வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
மேலும் 79 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுற்றி கலாம்ஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார்.
இவரது பெற்றோர் லட்சுமி நாராயணன், மற்றும் விஷ்ணு பிரியா. இவர்கள் இருவருமே சாப்ட்வேர் இன்ஜினியர்களாக உள்ளனர். தருண்குமார் மத்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதுகுறித்து, தருண்குமார் கூறுகையில், 'சிலம்பாட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். சிலம்பம் சுற்றுவதால் மன வலிமை, உடல் வலிமை கிடைக்கிறது. படிப்பில் அதிக கவனம் செலுத்த முடிகிறது. இன்னும் பல சாதனைகள் செய்வேன்.
'தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்றார்.

