/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25 மாதங்களாக 926 ஏக்கர் நிலம் முடக்கம்
/
25 மாதங்களாக 926 ஏக்கர் நிலம் முடக்கம்
ADDED : மார் 05, 2024 12:08 AM

அன்னுார்;கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், புறவழிச்சாலைக்காக முடக்கப்பட்ட நிலத்தை, 25 மாதங்களாக, விற்கவும் முடியாமல், அடமானம் செய்யவும் முடியாமல், கடன் பெற முடியாமல் தவிக்கிறோம் என விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக என்.எச். 209 உள்ளது. திண்டுக்கல்லில் துவங்கி, பொள்ளாச்சி, கோவை, சரவணம்பட்டி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடகா செல்கிறது. கோவை சத்தி வழித்தடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டியில், தினமும் காலை மற்றும் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக புறவழிச் சாலை அமைக்க 2020ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் குரும்பபாளையத்தில் சாலை துவங்கி, 19 கி.மீ., சென்று, அன்னுாரை அடைகிறது. பின்னர் புளியம்பட்டி, சத்தி வழியாக கர்நாடக எல்லை வரை 96 கி.மீ., தொலைவுக்கு இந்த புறவழிச் சாலை அமைகிறது. சில இடங்களில் ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான இடத்தில் புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கற்கள் நடப்பட்டன. கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2022 பிப்ரவரியில் புறவழிச்சாலை அமையும் இடங்களில் உள்ள 926 ஏக்கர் நிலங்களை வாங்கவோ விற்கவோ கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து அன்னூர், பெரிய நாயக்கன் பாளையம், புளியம்பட்டி, சத்தி சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட எஸ்.எப். எண்கள் தரப்பட்டன. அவை வாங்கவோ, விற்கவோ முடியாதபடி தடை விதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பணிகள் நடந்து 25 மாதங்கள் ஆகி விட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை.
இதுகுறித்து ஒன்னக்கரசம்பாளையம், கெம்ப நாயக்கன்பாளையம் மற்றும் கதவுகரை விவசாயிகள் கூறியதாவது:
ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம். முடியாத இடத்தில் மேம்பாலம் அமைக்கலாம். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் அதிக அளவில் உள்ள விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது.
இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கும். கருத்து கேட்பு கூட்டத்தில் 90 சதவீதம் பேர் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தோம். நிலத்தை முடக்கி 23 மாதங்கள் ஆகிவிட்டது.
முடக்கமும் நீக்கப்படவில்லை, நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் துவங்கவில்லை. துவங்காத பணிக்கு 25 மாதங்களாக எங்கள் நிலத்தை முடக்கி வைத்ததால் பலரும் தங்கள் குடும்பத் தேவைக்காக நிலத்தை விற்க முடியவில்லை. அடமானம் வைத்து கடன் பெற முடியவில்லை. ஒரு வீட்டின் தரைத்தளத்திற்கு வங்கியில் கடன் பெற்றுள்ளனர் அதே வீட்டில் முதல் தளம் கட்டுவதற்கு விண்ணப்பித்தால் தர மறுக்கின்றனர்.
வங்கி கடனை திருப்பி செலுத்தினாலும் அடமானம் செய்யப்பட்டதை ரத்து செய்ய பத்திரப்பதிவு துறை மறுக்கின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை நேரில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தை சொந்தமாக வைத்திருந்தும் விற்கவோ அடமானம் செய்யவோ முடியாமல் தவிக்கிறோம்.
இவ்வாறு கண்ணீருடன் கூறினர்.

