/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தை தாக்கி யானை குட்டி பலி
/
சிறுத்தை தாக்கி யானை குட்டி பலி
ADDED : ஜன 04, 2024 12:29 AM

போத்தனூர் : கோவைப்புதூர் அருகே சிறுத்தை தாக்கி, யானை குட்டி பலியானது.
கோவைபுதூர் அடுத்து அறிவொளி நகர் அருகே, வனப்பகுதியை ஒட்டி நேற்று காலை, 7:30 மணியளவில், குட்டி யானை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் படுத்து கிடப்பது, வனத்துறையினர் கண்காணிப்பு பணியின்போது தெரிந்தது.
மதுக்கரை வனச்சரகர் சந்தியா முன்னிலையில், கால்நடை மருத்துவ அலுவலரின் ஆலோசனைப்படி, லேக்டோஜன், குளூக் கோஸ் கலந்த நீர் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் யானைக்குட்டி, இரண்டு மணி நேரத்திற்கு பின் உயிரிழந்தது. மாவட்ட வன கால்நடை மருத்துவ அலுவலர் ஆய்வில், பிறந்து இரண்டு வாரங்களான ஆண் யானைக்குட்டி, முழு வளர்ச்சியின்றி இருந்ததால், சரிவர நடக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார், 10 நாட்களுக்கு முன் சிறுத்தை தாக்கி, உடலில் நகம், பற்காயங்கள் ஏற்பட்டு பலவீனமடைந்து, உயிரிழந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்குப்பின், வனப்பகுதியில் யானை குட்டியின் உடல் புதைக்கப்பட்டது.