/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தம் புது காலை... பொன்னிற வேளை...! பழங்குடி பெண்களுக்கு கிடைத்தது வேலை
/
புத்தம் புது காலை... பொன்னிற வேளை...! பழங்குடி பெண்களுக்கு கிடைத்தது வேலை
புத்தம் புது காலை... பொன்னிற வேளை...! பழங்குடி பெண்களுக்கு கிடைத்தது வேலை
புத்தம் புது காலை... பொன்னிற வேளை...! பழங்குடி பெண்களுக்கு கிடைத்தது வேலை
ADDED : மார் 02, 2026 06:19 AM

காரமடை: காரமடை வனச்சரகம் சார்பில், தொழில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு, வெளியுலகுக்கு வந்த பழங்குடியின பெண்களுக்கு, உடனடியாக வேலை வாய்ப்பு கிடைத்தது.
காரமடை அருகே அத்திக்கடவு, பில்லுார், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதுார், காலனிபுதுார், செங்குட்டை, குட்டைபுதுார், பட்டிச் சாலை, பரளிக்காடு, பூச்சமரத்துார் போன்ற பல்வேறு மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள பழங்குடியினரின் வாழ்வாதாரம் முன்னேற, காரமடை வனத்துறையினர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பரளிக்காடு சூழல் சுற்றுலா வாயிலாக, பழங்குடியினர் நடனம், பரிசல் பயணம், உணவு என, 100க்கும் மேற்பட்ட பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
பழங்குடியின பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கவும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும், இவர்களை தொழில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல காரமடை வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, 50 பழங்குடியின பெண்கள், முதற்கட்டமாக, திருப்பூரில் உள்ள பிரபலமான பின்னலாடை நிறுவனத்துக்கு தொழில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதில், அங்கேயே அவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தரப்பட்டது. இதில் விருப்பம் இருந்தவர்கள், அங்கேயே வேலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-
தொழில் சுற்றுலாவுக்கு, 50 பழங்குடியின பெண்கள் அழைத்து செல்லப்பட்டு, நிறுவனத்தின் செயல்பாடுகள், வேலை விபரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. 20 பெண்கள் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்று பணியில் சேர உள்ளனர். பழங்குடியினர் வனத்தை மட்டுமே சார்ந்து இருப்பது இதனால் குறையும். வெளியுலகுக்கு அவர்கள் வந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பெண்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரவே இந்நடவடிக்கை. இந்த சுற்றுலாவுக்கு வந்த பழங்குடியின பெண்கள் வெளி உலகை தெரிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டினர். பயிற்சியின் போது உடனடியாக அதை கற்றுக்கொண்டனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொழில் சுற்றுலா ஏற்பாடுகளை, வனவர் தியாகு, வனக்காவலர் போஸ்மணி, பிரேம்குமார் உள் ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

