/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய பருத்திக் கொள்கையில் மாற்றம் கட்டாயம் வேண்டும்! அரசை வலியுறுத்துகிறது ஜவுளித்துறை
/
தேசிய பருத்திக் கொள்கையில் மாற்றம் கட்டாயம் வேண்டும்! அரசை வலியுறுத்துகிறது ஜவுளித்துறை
தேசிய பருத்திக் கொள்கையில் மாற்றம் கட்டாயம் வேண்டும்! அரசை வலியுறுத்துகிறது ஜவுளித்துறை
தேசிய பருத்திக் கொள்கையில் மாற்றம் கட்டாயம் வேண்டும்! அரசை வலியுறுத்துகிறது ஜவுளித்துறை
ADDED : ஜன 20, 2025 06:46 AM
கோவை,: கச்சாப் பொருள் விலை உட்பட பல்வேறு காரணங்களால், ஜவுளித் துறையின் செயல்பாடு மந்தமாக உள்ள நிலையில், தேசிய பருத்தி மற்றும் ஜவுளிக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டியது, காலத்தின் கட்டாயம் என, தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, ஜவுளித் தொழில் துறையினர் கூறியதாவது:
ஜவுளித் துறையைப் பொறுத்தவரை பருத்தி, பாலியஸ்டர், விஸ்கோஸ் ஆகியவை முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. இதில், உள்நாட்டில் தரமான பருத்தி உற்பத்தி போதுமானதாக இல்லாததால், இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
11 சதவீத இறக்குமதி வரி
இறக்குமதிக்கு 11 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் இரண்டுமே சர்வதேச சந்தைகளை விட, விலை அதிகமாக உள்ளது.
இதனால், உள்நாட்டு நுகர்வோர் ஜவுளிப் பொருட்களை, 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
கச்சாப்பொருள், நூல், துணி, ஆடை, மறுசுழற்சி ஜவுளித்துறை என ஜவுளித் துறையின் சங்கிலியில் உள்ள, பல்வேறு தொழில்களும் வெவ்வேறு விதமாக பாதிக்கப்படுகின்றன.
மொத்த ஜவுளி உற்பத்தியில், 10 சதவீதம் ஏற்றுமதி எனக் கொண்டால், 90 சதவீதம் உள்நாட்டு சந்தையில் விற்பனையாகிறது.
உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு
வங்கதேசம், சீனா, ஸ்பெயின், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, முறையான, முறையற்ற வகைகளில் இறக்குமதி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களால், உள்நாட்டு உற்பத்தியில், 10 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறது.
கச்சாப் பொருட்களின் விலை, சாதகமற்ற ஏற்றுமதி -- இறக்குமதிக் கொள்கைகளால், 3 சதவீதம் வரை, ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. இதனால், நமது ஜவுளி உற்பத்தித் திறனில் சுமார் 87 சதவீதம் மட்டுமே இயக்க முடிகிறது.
பருத்தி உற்பத்தித் திறன்
சீனாவில் பருத்தி உற்பத்தித் திறன் ஹெக்டருக்கு, 2250 கிலோவாக உள்ளது. ஆஸி.,யில் ஹெக்டருக்கு 1950 கிலோ, துருக்கி 1800, பிரேசில் 1770 கிலோவாக பருத்தி மகசூல் உள்ளது. இந்தியாவில் சராசரியாக 450 கிலோவாக உள்ளது. அதாவது ஐந்து மடங்கு குறைவு.
நவீன தொழில்நுட்ப காலத்தில், அதே அளவுக்கு தரமான, கூடுதல் மகசூல் கிடைக்கும் விதைகளை, இந்தியாவுக்குள் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அல்லது அதேபோன்ற விதைகளை இங்கு உற்பத்தி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் பருத்தி உற்பத்தித் திறனை மூன்று மடங்கு அதிகரித்தாலும் நமக்கு லாபமே.
இந்தியாவில் மகசூல் குறைவாக இருப்பதால்தான், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது, இறக்குமதிக்கும், கட்டுப்பாடு தேவையாக உள்ளது.
கொள்கை மாற்றம் தேவை
சாகுபடிச் செலவினம் குறைவாகவும், மகசூல் அதிகமாகவும் இருந்தால், பருத்தி உள்நாட்டிலேயே குறைவான விலைக்குக் கிடைக்கும். விவசாயிக்கும் லாபம், ஜவுளித் துறைக்கும் மலிவான விலையில் கச்சாப்பொருள் கிடைக்கும்.
பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்றவை ஏகபோகமாக ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கே லாபம் கிடைக்கும் வகையில், இருக்கும் கொள்கைகளையும் மாற்ற வேண்டும். இதனால், சர்வதேச சந்தை விலைக்கு நிகராகவோ அல்லது அதை விடக் குறைவாகவோ, கச்சாப் பொருள் கிடைக்கும்.
அவ்வாறு கச்சாப்பொருள், நியாயமான விலைக்குக் கிடைத்தால், நமது ஜவுளி உற்பத்தித் திறனை, 110 சதவீதமாக நிச்சயம் உயர்த்த முடியும். ஜவுளித் துறையைக் காப்பாற்ற, தேசிய பருத்தி, ஜவுளிக் கொள்கைகளில் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, தொழில்துறையினர் தெரிவித்தனர்.