/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரும்பள்ளத்தில் முகாமிட்ட காட்டு யானை கூட்டம்
/
பெரும்பள்ளத்தில் முகாமிட்ட காட்டு யானை கூட்டம்
ADDED : செப் 21, 2024 05:44 AM
தொண்டாமுத்தூர் : அட்டுக்கல் பெரும்பள்ளத்தில், நேற்று மாலை முதல் இரவு வரை, காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டது.
கோவை வனச்சரகம் மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்தின் எல்லைப்பகுதியான அட்டுக்கல் பெரும்பள்ளம், வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இப்பகுதியில், நாள்தோறும், மாலை மற்றும் இரவு நேரங்களில், காட்டு யானைகள் வெளியேறி, அதிகாலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, 7 யானைகள் கொண்ட கூட்டம், அட்டுக்கல் பெரும்பள்ளம் பகுதியில் முகாமிட்டது. சுமார், 2 மணி நேரத்திற்கும் மேலாக, ஒரே இடத்தில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்ட தகவல் பரவியதும், யானைகளை பார்க்க பொதுமக்கள் திரண்டனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். இருப்பினும், இரவு 7:00 மணிக்கு பின்பே, யானைகள் கூட்டம் மெல்ல நகர்ந்து, குப்பேபாளையம், மண்குட்டு பகுதி அருகே சென்றது. அங்கிருந்து, இரவு 9:00 மணி வரை, யானைகள் அங்கும் இங்கும் என நகர்ந்து சென்றது. இருப்பினும், வனப்பகுதிக்குள் செல்லவில்லை. இரவு முழுவதும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டனர்.