/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிரோடு உரசுது மின்கம்பி... மரக்கிளையால் ஆபத்து
/
உயிரோடு உரசுது மின்கம்பி... மரக்கிளையால் ஆபத்து
ADDED : நவ 24, 2024 11:44 PM

தெருவிளக்கு பழுது
சரவணம்பட்டி, சத்தி மெயின் ரோடு, நான்காவது வார்டு, சிவவிலாஸ் ஸ்வீட் கடை எதிரே, 'எஸ்.பி -45, பி -16' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் தெருவிளக்கு பழுதை சரிசெய்து தருமாறு பலமுறை வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கையில்லை.
- முருகேஷ், சரவணம்பட்டி.
இருட்டில் மிரட்டும் நாய்கள்
சிங்காநல்லுார், 58வது வார்டு, விவேகானந்தா நகர், அம்மன் கோவிலுக்கு தெற்கே உள்ள வீதியில், கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. கடும் இருளுக்கு மத்தியில், தெருநாய்களும் கூட்டம், கூட்டமாக சுற்றுவதால், இரவில் வெளியில் வரவே அச்சமாக உள்ளது.
- ஏகாம்பரம், விவேகானந்தா நகர்.
அடிக்கடி மின்தடை
துடியலுார், பூம்புகார் நகரில் சாலையோரம் உள்ள பெரிய மரங்களின் கிளைகள், அருகில் உள்ள மின் கம்பிகளில் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது. மரத்தின் கிளைகளை பாதுகாப்பாக வெட்டி, அகற்ற வேண்டும்.
- வேலுச்சாமி, பூம்புகார் நகர்.
போக்குவரத்து இடையூறு
ஆர்.எஸ்.புரம், மேற்கு சம்பந்தம் ரோடு, வ.உ.சி., வீதி சந்திப்பில், சாலையோரம் பழுதடைந்த பழைய இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எப்போதும் இங்கேயே நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்களால், மற்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். பெரிய வாகனங்கள் வரும்போது மிகவும் இடையூறாக உள்ளது.
- கோபாலகிருஷ்ணன், ஆர்.எஸ்.புரம்.
பாதிசாலை வரை குப்பை
குருடம்பாளையம், பழனிகவுண்டன்புதுாரில், சாலையோரம் தொடர்ந்து சிலர் குப்பையை கொட்டிச்செல்கின்றனர். பாதி சாலை வரையும் நிறைந்துள்ள குப்பையை அகற்றச் சொல்லியும் நடவடிக்கையில்லை. போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. குப்பையை அகற்றுவதுடன் மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தங்கவேல், குருடம்பாளையம்.
தவிக்கும் பயணிகள்
வடவள்ளி - தொண்டாமுத்துார் ரோட்டில் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்துகள் வருவதால், முதியோர்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் ஆட்டோ, கால்டாக்சியில் பயணிக்கின்றனர். இவ்வழித்தடத்தில், மினி பஸ்களை இயக்கினால், மிகவும் உதவியாக இருக்கும்.
- முத்துக்குமார், வடவள்ளி.
தெருநாய்களால் தொல்லை
சுந்தராபுரம் பழனியப்பா லேஅவுட் பகுதியில்,தெருநாய்கள், கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்லவே குழந்தைகள், முதியவர்கள் அஞ்சுகின்றனர். பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் விபத்துகள் நடக்கிறது. ஒன்றுக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இரவு முழுவதும் குரைப்பதால், துாங்கவும் முடியவில்லை.
- பிரியங்கா, சுந்தராபுரம்.
வீணாகும் தண்ணீர்
கோவை மாநகராட்சி, 57வது வார்டு, இரண்டாவது வீதியில், சாலை விரிவாக்கம் செய்ய குழிகள் தோண்டப்பட்டன. இதில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. தேங்கி நிற்கும் நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது.
- அக்சயா, 57வது வார்டு.
சேதமடைந்த கம்பம்
மேற்கு மண்டலம், 73வது வார்டு, ராபர்ட்சன் ரோடு, ஆவின் பால் விற்பனையகம் அருகில், 'எஸ்.பி -17 பி -12' என்ற எண் கொண்ட கம்பம் மோசமாக சேதமடைந்துள்ளது. கம்பத்தின் அடிப்பகுதி முற்றிலும் துருப்பிடித்துள்ளது. அருகில் பள்ளிகள் உள்ள நிலையில் விழும் நிலையில் உள்ள கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.
- கோபாலகிருஷ்ணன், மேற்கு மண்டலம்.
'மினி' குப்பை கிடங்கு
கோவை மாநகராட்சி, 54வது வார்டு, ஜோதி நகரில், மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. கட்டடக்கழிவுகளும் தொடர்ந்து கொட்டப்படுவதால், மலை போல் குப்பை குவிந்துள்ளது. குட்டி குப்பைகிடங்கு போல மாறிவருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- வினோத், ஜோதி நகர்.
லட்சமி நகரில்கும்மிருட்டு
இடையர்பாளையம், லட்சுமி நகர், ஐந்தாவது வீதியில், பைரவா கோவில் எதிர்புறம், கம்பம் எண் 20ல், ஒரு மாதத்திற்கு மேலாக தெருவிளக்கு பழுதாகியுள்ளது. கடும் இருள் காரணமாக, இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பணி முடிந்து இரவு வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்டோர் பாதிப்படைகின்றனர்.
- பிரபாவதி, இடையர்பாளையம்.