/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனித, வனவிலங்கு மோதல் தடுக்க தீர்வு வேண்டும்
/
மனித, வனவிலங்கு மோதல் தடுக்க தீர்வு வேண்டும்
ADDED : மார் 17, 2025 12:24 AM
பெ.நா.பாளையம்; துடியலுார் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில், 'மனித, வனவிலங்கு மோதலுக்கான புதுமையான தீர்வுகள்' என்ற 36 மணிநேர ஹேக்கத்தான் நடந்தது.
நிகழ்வை, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் முன்னிலை வைத்தார்.
நிகழ்ச்சியில், யானைகள் மற்றும் பிற விலங்குகள் பெரும்பாலும் உணவு மற்றும் தங்கும் இடம் தேடி, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. இதனால், விவசாயிகள் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சேதங்கள், காயங்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மனித, வனவிலங்கு மோதல்களை தவிர்க்க, புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்க, ஆர்வமுள்ள தனிநபர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து சரியான தீர்வுகளை கொண்டு வருவதே இந்த ஹேக்கத்தான் என்ற கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது.
170 அணிகள் பங்கு பெற்று, பல்வேறு தீர்வுகளை முன் வைத்தனர். அவற்றில், 21 அணிகள் தேர்வு பெற்று, 36 மணிநேர போட்டியில் கலந்து கொண்டு, தங்களின் தீர்வுகளை சமர்ப்பித்தனர். நடுவர்களாக, ரூட்ஸ் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் சம்பத்குமார், மற்றும் வெஸ்டின் நிறுவனத்தின் குளோபல் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட் லீடர் புருஷோத்தமன் பங்கேற்றனர். கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் முதலிடம் பிடித்த கோவை ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, இரண்டாம் இடம் பிடித்த சென்னை செயிண்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரி அணிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வனத்துறை தலைமையக வன உதவி காப்பாளர் கிரிஷ் பால்வே, ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.