/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகாலையில் வீட்டின் கேட்டை உடைத்து உணவு தேடி குட்டியுடன் வந்த காட்டு யானை
/
அதிகாலையில் வீட்டின் கேட்டை உடைத்து உணவு தேடி குட்டியுடன் வந்த காட்டு யானை
அதிகாலையில் வீட்டின் கேட்டை உடைத்து உணவு தேடி குட்டியுடன் வந்த காட்டு யானை
அதிகாலையில் வீட்டின் கேட்டை உடைத்து உணவு தேடி குட்டியுடன் வந்த காட்டு யானை
ADDED : நவ 01, 2024 11:39 PM

வடவள்ளி; கோவையில், அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய குட்டியுடன் கூடிய காட்டு யானை, உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்றது.
தொடர் கதை
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவார பகுதிகளில், காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில், குடியிருப்புகள் அதிகரிப்பதாலும், காட்டு யானைகளின் உணவு பழக்கங்கள் மாறி வருவதாலும், காட்டு யானைகள் அதிகளவு குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன.
உணவு தேடி...
இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மருதமலை வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டு யானை, ஐ.ஓ.பி., காலனி பகுதியில் உணவு தேடி வந்துள்ளது.
அங்கிருந்த ஒரு வீட்டின் கேட்டை தள்ளி உடைத்து, குட்டியுடன் உள்ளே புகுந்த காட்டு யானை, வீட்டின் பார்க்கிங்கில் இருந்த அழகிற்காக வளர்க்கும் செடிகளை உண்டது. அதன்பின், வீட்டின் முன் கதவை உடைத்து உணவை தேடி உள்ள செல்ல முயற்சித்தது. ஆனால், கதவின் வெளிப்புறத்தில் கூடுதலாக இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்ததால், யானைகள் உள்ளே செல்ல முடியவில்லை.
அதிகாலையில், வீட்டின் கேட் மற்றும் கதவை காட்டு யானை உடைத்து உள்ளே வர முயன்றதால், வீட்டில் தரை தளத்தில் இருந்தவர்கள் அச்சமடைந்து, முதல் தளத்திற்கு சென்று ஒளிந்து கொண்டனர்.
காட்டு யானைகள் சிறிது நேரம் அங்கியே நின்று கொண்டு, வனத்துறையினர் வருவதற்குள், வீட்டில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த பரபரப்பான காட்சிகள், அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகள், நேற்று, சமூக வலைதளங்களில் பரவியது. வனப்பகுதியை ஒட்டியே ஏராளமான குடியிருப்புகள் உருவாகியுள்ளதால், வனத்துறையினர் ரோந்து காவலர்களை அதிகரிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.