/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழி தோண்டி ஓராண்டாகியும் சாக்கடை அமைக்கவில்லை; கொசு தொல்லையால் மக்கள் தவிப்பு
/
குழி தோண்டி ஓராண்டாகியும் சாக்கடை அமைக்கவில்லை; கொசு தொல்லையால் மக்கள் தவிப்பு
குழி தோண்டி ஓராண்டாகியும் சாக்கடை அமைக்கவில்லை; கொசு தொல்லையால் மக்கள் தவிப்பு
குழி தோண்டி ஓராண்டாகியும் சாக்கடை அமைக்கவில்லை; கொசு தொல்லையால் மக்கள் தவிப்பு
ADDED : மே 12, 2025 12:16 AM

மேட்டுப்பாளையம்; குழி தோண்டி ஓராண்டாகியும், சாக்கடை அமைக்கவில்லை. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசு அதிகளவில் உற்பத்தியாகி, பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காரமடை ரங்கராஜன் லே-அவுட்டில், 85 வீடுகள் உள்ளன. இந்த லேஅவுட் அமைத்து, 25 ஆண்டுகள் ஆகின்றன. காரமடை நகராட்சி, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி எல்லையில், இந்த லே அவுட் அமைந்துள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன் குழி தோண்டி, 'சோக் பிட்' அமைத்து, அதில் கழிவு நீரை விட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நகராட்சியின் சார்பில், சாக்கடையும், சிறிய பாலமும் அமைக்கும் பணி துவங்கியது. இந்த லே அவுட்டின் ஒட்டுமொத்த கழிவு நீரை சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, ஆசிரியர் காலனி குடியிருப்பு சாக்கடையில் விடுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சாக்கடை அமைக்கும் பணி பாதியில் நின்றது. ஒரு சில இடங்களில் மட்டும் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள பகுதிகளில் சாக்கடைகள் அமைக்காமல் ஒரு ஆண்டாக பணிகள் ஏதும் நடைபெறாமல் உள்ளன.
இது குறித்து ரங்கராஜன் லேஅவுட் பொதுமக்கள் கூறுகையில், ''எங்கள் குடியிருப்பில் சாக்கடை கட்ட நகராட்சி நிர்வாகம், நடவடிக்கையை எடுத்ததை அடுத்து மகிழ்ச்சி அடைந்தோம். அதனால் ஒவ்வொரு வீட்டின் முன்பும் போடப்பட்டிருந்த சோக் பிட் குழிகள் அனைத்தும் மூடப்பட்டன.
கான்கிரீட் சுவர் அமைத்து, சாக்கடை கட்டும் பணிகளை துவக்கினர். ஓரிரு மாதத்தில் பணிகள் தடைபட்டதால், கழிவு நீர் அனைத்தும் மொத்தமாக இரண்டு இடங்களில் தேங்கி நிற்கின்றன. அதிலிருந்து உற்பத்தியாகும் கொசு தொல்லையால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். திட்டமிடாமல், பணிகள் துவங்கியதால், சாக்கடை கட்டுமான பணிகள் பாதியில் நின்றுள்ளன.
குழிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பது குறித்து, நகராட்சிக்கு தகவல் தெரிவித்தால், வந்து வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் நிரந்தரமாக சாக்கடை அமைத்து, கழிவுநீர் வெளியே செல்ல, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.