உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் ஆவின் பால் கொள்முதல் பாதிப்பு
உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் ஆவின் பால் கொள்முதல் பாதிப்பு
ADDED : ஆக 24, 2026 07:31 PM
அன்னூர்: பால் உற்பத்தியாளர்கள் அறிவித்த போராட்டத்தால் ஆவின் பால் கொள்முதல் பாதிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கான தீவன விலை அதிகரித்து விட்டது. தொழிலாளர்கள் சம்பளம் உயர்ந்து விட்டது. பால் சுரப்பு குறைந்துவிட்டது. பால் கொள்முதல் விலை கட்டுபடி ஆவதில்லை. பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் 24ம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டத்தை அறிவித்தன.
இதையடுத்து அன்னூர் வட்டாரத்தில் வாக்கனாங்கொம்பு, காரனூர் உள்ளிட்ட பல பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் பணியாளர்கள் நல சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 324 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் 90 சங்கங்களில் 90 சதவீத பால் கொள்முதல் நேற்று குறைந்தது. வழக்கமாக ஆவின் கொள்முதல் செய்யும் பாலில் 30 சதவீதம் வரை நேற்று குறைந்துள்ளது. நாளை முதல் (இன்று) போராட்டம் தீவிரமடையும், என்றார். ஆவின் பால் நிறுத்த போராட்டத்தால் வாடிக்கையாளர்களுக்கு பால் வினியோகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
