/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை
/
கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை
ADDED : ஜூலை 31, 2025 10:13 PM

கோவை; ஆவராம்பாளையம் மற்றும் பீளமேடு பகுதிகளில், ரயில்வே தண்டவாளத்துக்கு குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவையில் ஆவராம்பாளையம், பீளமேடு, தண்ணீர் பந்தல், நீலிக்கோணாம்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, நஞ்சுண்டாபுரம் மற்றும் ஈச்சனாரி ஆகிய இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடக்க மேம்பாலங்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதில், ஆவராம்பாளையம், பீளமேடு, நஞ்சுண்டாபுரம், ஈச்சனாரி ஆகிய இடங்களில் கட்டப்பட்டன.
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீலிக்கோனாம்பாளையத்தில் கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. தண்ணீர்பந்தல் பாலம் பணியை மீண்டும் துவக்க மாநில நெடுஞ்சாலைத்துறை (கிராமச்சாலைகள்) பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வசதியாக, ஆவராம்பாளையம் மற்றும் பீளமேடு பகுதியில் ரயில்வே தண்டவாளத்துக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆவராம்பாளையத்தில், நான்கு கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தண்டவாளத்துக்கு கீழ் கான்கிரீட் 'பாக்ஸ்' அமைக்க ரயில்வே நிர்வாகத்தினர் முடிவெடுத்து, கடந்தாண்டு டிச., மாதம் அதற்கான பணிகளை துவக்கினர். சில நாட்களிலேயே கிடப்பில் போட்டு விட்டனர். குழி தோண்டப்பட்டு, அப்படியே இருக்கிறது; மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
அருகாமையில் அமைத்துள்ள தற்காலிக கூடாரத்தில், பழுது நீக்க கொண்டு வரப்பட்ட இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பீளமேடு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை நிலம் கையகப்படுத்தும் பிரிவினர் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
நில உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி, நிலம் கையகப்படுத்திய பின், இதர பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை (கிராம சாலைகள்) பிரிவினர் தீவிரப்படுத்த வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.