ADDED : ஜூன் 20, 2026 04:30 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், மைய தடுப்புகளில் உள்ள கம்பிகள் பெயர்ந்து விபத்துக்கு வழி வகுப்பதால் ஓட்டுநர்கள் அச்சத்துக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் போதிய பாதுகாப்பு வசதிகள், சர்வீஸ் ரோடு அகலம் இல்லாதது போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், ரோட்டின் மையத்தடுப்பில் உள்ள கம்பிகள் ஆங்காங்கே பெயர்ந்து, விபத்துகளுக்கு வழி வகுக்கின்றன. ஒரு சில இடங்களில், கம்பியுடன், பொதுமக்கள் நடந்து செல்வதை குறிக்கும் அறிவிப்பு பலகை பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'மையத்தடுப்பில் உள்ள கம்பிகள் பெயர்ந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இவற்றை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி சேதமடைந்துள்ள கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
