/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே விபத்து அபாயம்
/
உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே விபத்து அபாயம்
UPDATED : டிச 22, 2025 05:57 AM
ADDED : டிச 22, 2025 05:56 AM

உக்கடம்: ஆத்துப்பாலம் ரோட்டில் வருவோர், வாலாங்குளத்தில் வருவோர், செல்வபுரம் பைபாஸில் வருவோர், நவாப் ஹக்கீம் சாலையில் வருவோர் உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் முன்புள்ள ரவுண்டானாவில் சந்திக்கின்றனர்.
இதில், ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர், செல்வபுரம் பைபாஸில் வருவோர் ரவுண்டானா அருகே வரும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க, மேம்பாலத்தின் இறங்கு தளத்தின் அகலத்தை சுருக்கி, மையத்தடுப்பு கற்களை போக்குவரத்து போலீசார், சற்றுத்தள்ளி வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக, செல்வபுரம் மற்றும் ஆத்துப்பாலம் ரோட்டில் வரும் வாகனங்கள், ஒப்பணக்கார வீதிக்கு எளிதாக திரும்பிச் செல்ல வழி கிடைத்திருக்கிறது.
பாலத்தின் துாண்கள் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் செயல்படுகிறது. டவுன் பஸ்கள் நிறுத்தி பயணிகள் ஏற்றுகின்றன. இதனால், மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் திரும்பிச் செல்வதற்கு வழி கிடைப்பதில்லை. பாலத்தில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
இறங்கு தளத்தின் அகலம் சுருங்கியிருப்பதால், பாலத்தில் இருந்து வேகமாக வருவோர் விபத்தை சந்திக்கும் அபாயம் இருக்கிறது. மையத்தடுப்பு கற்களில் 'ரிப்ளக்டர்' ஸ்டிக்கர்கள் இல்லை. இரவில் பாலத்தில் வருவோர் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.
மேம்பால இறங்கு தளத்தின் அகலத்தை, நெடுஞ்சாலைத்துறையினருடன் ஆலோசிக்காமல், போக்குவரத்து போலீசார் தன்னிச்சையாக சுருக்கி, மையத்தடுப்பு கற்களை மாற்றியமைத்தது தவறு. அவற்றை மீண்டும் பழைய இடத்திலேயே வைத்து, விபத்து ஏற்படாமல், போக்குவரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
மேம்பாலத்தில் இருந்து இறங்குவோர், இடையூறின்றி ஒப்பணக்கார வீதிக்கு திரும்பும் வகையில், அவ்விடத்தில் பஸ்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும்.

