ADDED : ஜூன் 15, 2026 11:37 PM

கோவை: ''நிலத்தை அளவிட பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரே கோரிக்கைக்காக எத்தனை முறை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நடக்க வைக்கிறார்கள்?'' என கேட்கிறார் தாளியூர் முதியவர் பூசாரிராமன்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. 606 மனுக்கள் பெறப்பட்டன. பெரும்பாலும் விதவை ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமைத்தொகை, நில அளவீடு மற்றும் வீடு கோருதல் தொடர்பானவை. கடந்த ஆண்டு கொடுத்த மனுக்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்காததால், பலர் மீண்டும் அதே கோரிக்கையுடன் வந்திருந்தனர்.
கணபதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜான் பீட்டர் மூர்த்தி, ''மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. பயணிகளை ஏற்றிசெல்ல அனுமதி பெற்ற சில ஆட்டோக்கள் சரக்குகளையும் ஏற்றிசெல்கின்றன. விதி மீறி இயங்கும் இந்த ஆட்டோக்களால் சரக்கு வாகனம் ஓட்டுவோர் பிழைப்பு பாதிக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்களை வாடகைக்கு எடுத்து சிலர் ஓட்டுகின்றனர். தடுக்க ஆளில்லை'' என்றார்.
பீளமேடு மூதாட்டி ஜெயா, ''இ.பி. பென்ஷன் தொடர்பாக மனு கொடுக்க வந்தேன். கூட்டம் அதிகம். நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. கோரிக்கை அடிப்படையில் மனுக்களை பிரித்து டோக்கன் வழங்கினால் நெரிசல் குறையும் என்றார்.
இதை தவிர, அரசு மருத்துவமனையில் அலட்சியம், ஜெப கூட்டங்களை ஒழுங்குபடுத்தல் போன்ற விஷயங்களும் மனு உருவில் வந்தன. இந்து முன்னணி, ஆதிதிராவிடர் பேரவை போன்ற அமைப்புகளும் மனு அளித்தன.
