ஆழியாறு பாசன நீரில் முறைகேடு தடுக்க... நடவடிக்கை தேவை!குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ஆழியாறு பாசன நீரில் முறைகேடு தடுக்க... நடவடிக்கை தேவை!குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
UPDATED : ஜூன் 30, 2026 06:01 PM
ADDED : ஜூன் 30, 2026 05:30 PM
பொள்ளாச்சி: 'பி.ஏ.பி., கால்வாய்கள் அருகே நிலம் வாங்கி முறைகேடாக குழாய் பதித்து மற்ற பகுதிக்கு நீர் கொண்டு சென்று விற்பனை செய்வது, ஆக்கிரமிப்பு, சேதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார்.
விவசாயிகள் பேசியதாவது:
தாவளம் ரோட்டில், பஸ்கள் செல்வதற்கு ஏதுவாக, ரோட்டின் இருபுறமும் வளர்ந்துள்ள புதரை அகற்ற வேண்டும். பி.ஏ.பி., கால்வாய் அருகே நிலம் வாங்கும் சிலர், முறைகேடாக குழாய் அமைத்து மற்றொரு பகுதிக்கு தண்ணீரை கொண்டு சென்று விற்கின்றனர். மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர்.
நஞ்சேகவுண்டன்புதுாரில் தனிநபர் ஒருவர், சைட் போடுவதற்காக கால்வாயை மூடியுள்ளார். இக்கால்வாயை மூடியதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, 500 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, அரணி கால்வாய் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. நிலம் வாங்கி கம்பி வேலி போடும்போது கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. கால்வாய்கள் சேதப்படுத்துதல், ஆக்கிரமிப்பால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி., அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு மாற்றாக, குழாய் வழியாக பாசனம் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதுபோன்று திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன், விவசாயிகள், விவசாய பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.
ஏற்கனவே, நிதித்துறை, நீர்வளத்துறையினர், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாயை துார்வாரவும்; கால்வாய்கள் முழுவதும் புனரமைக்க, 4,500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தினோம். இதற்காக, நிதியை ஒதுக்க வேண்டும்.
ஆனைமலை தாலுகாவில் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மின்வாரியத்தில் 'தட்கல்' முறை விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவம்பாடிவலசு, கோதவாடி குளங்கள், ராமபட்டிணம் சின்ன அணை, பெரிய அணைகள் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கடும் வறட்சி நிலவுவதால் குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.
முதியவர்கள் எளிதாக சென்று வரும் வகையில், கீழ்தளத்தில் வங்கிகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
சப் - கலெக்டர் பேசுகையில், ''கால்வாய் அருகே முறைகேடாக குழாய் பதித்து நீர் எடுத்து செல்வது குறித்து ஆய்வு செய்யப்படும். முறைகேடாக குடிநீர் கொண்டு செல்ல கால்வாய் அருகே குழாய் பதிக்க அனுமதி கொடுககப்படாது. தனிநபர் கால்வாய் சேதப்படுத்தி மூடியது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
