/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரையாடுகளை பாதுகாக்க நடவடிக்கை; வனம் ஒட்டிய பகுதிகளில் விழிப்புணர்வு
/
வரையாடுகளை பாதுகாக்க நடவடிக்கை; வனம் ஒட்டிய பகுதிகளில் விழிப்புணர்வு
வரையாடுகளை பாதுகாக்க நடவடிக்கை; வனம் ஒட்டிய பகுதிகளில் விழிப்புணர்வு
வரையாடுகளை பாதுகாக்க நடவடிக்கை; வனம் ஒட்டிய பகுதிகளில் விழிப்புணர்வு
ADDED : பிப் 04, 2025 11:55 PM

பொள்ளாச்சி; தமிழகத்தில், வரையாடுகளை பாதுகாக்க, வனத்துறையினர், 'அரும்புகள்' என்ற தன்னார்வ அமைப்பு வாயிலாக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
'நீலகிரிட்ராகஸ் ைஹலோக்ரியஸ்' என வகைப்படுத்தப்பட்ட, நீலகிரி வரையாடுகள் சங்க இலக்கியத்தில் வருடை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வரையாடுகள், 2010ம் ஆண்டு, இயற்கை பாதுகாப்பான சர்வதேச ஒன்றியத்தால் அழிந்து வரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972, அட்டவணை 1ன் கீழ், பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
வரையாடுகளின் சூழலியல் மற்றும் கலாசார முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு, மாநில விலங்காக அறிவித்து, பாதுகாக்கப்பட்டும் வருகிறது.
இவ்வகை ஆடுகள், மேற்கு தொடர்ச்சி மலையில், தமிழக, கேரள வனப்பகுதிகளில் தான் காண முடிகிறது என, வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர். வேட்டை, வாழ்விடங்கள் அழிப்பு போன்ற காரணங்களால், வரையாடுகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த, 2022ல், தமிழக அரசு, 25 கோடி ரூபாயில், நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரையாடுகளின் வாழ்விடங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
கடந்தாண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழகத்திற்கு உட்பட்ட நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான, 140 இடங்களில், 1,031 வரையாடுகள், இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால், வரையாடுகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க, மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள், கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரையாடுகளை பாதுகாக்க, 'அரும்புகள்' என்ற தன்னார்வ அமைப்பினர், நாடகம், ஆடல் மற்றும் பாடல் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதன்படி, வனம் மற்றும் அதனை சார்ந்த உயிரினங்களின் முக்கியத்துவத்தை, அடுத்து வரும் சந்ததியினர் தெரிந்து கொள்வர்.
வனப்பகுதி சார்ந்த சுற்றுலாத் தலங்கள், கிராமங்களுக்கு செல்லும் போது, வரையாடுகளை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை வனத்தினுள் வீசுவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வரையாடுகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.