/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
30 நிமிடத்தில் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவுரை
/
30 நிமிடத்தில் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவுரை
30 நிமிடத்தில் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவுரை
30 நிமிடத்தில் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவுரை
ADDED : மார் 01, 2026 06:06 AM

கோவை: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க உருவாக்கப்பட்ட கைபேசி செயலிகளை பயன்படுத்துவது குறித்து, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், தேர்தலில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், தேர்தல் ஆணையத்தின் திட்ட அலுவலர் சவுராவ் ராய் காணொலி வாயிலாக பயிற்சி வழங்கினார். வாக்காளர்களுக்கான செயலி, ஓட்டுப்பதிவு விபரங்கள், வேட்பு மனு தாக்கல் பதிவுகள் உட்பட தகவல்களை பதிவு செய்ய, தேர்தல் அலுவலர்களுக்கான செயலிகள் குறித்து விளக்கப்பட்டது.
குறிப்பாக, தேர்தல் நடத்தை விதிமீறல்களை உடனுக்குடன் புகார் அளிக்க பொதுமக்கள் பயன்படுத்தும் 'சி -விஜில்' செயலியின் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விதிமீறல்களை, பொதுமக்கள் புகைப்படம் அல்லது வீடியோவாக பதிவு செய்து, உடனடியாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
செயலி வாயிலாக பெறப்படும் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, புகார் கிடைத்த 5 நிமிடங்களில், மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி அதை பரிசீலிக்க வேண்டும். தொடர்ந்து, 15 நிமிடங்களில் விரைவுபடை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, 30 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜி.பி.எஸ்., வசதியுடன் பதிவாகும். புகார் அளித்தவர்களும் அதன் நிலையை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
கைப்பற்றப்படும் பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக, நோடல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் விளக்கப்பட்டது. பயிற்சியில், தமிழகம், புதுச்சேரி, கேரள பகுதிகளை சேர்ந்த, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை அலுவலர்கள், சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

