/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர் நியமிக்கணும்; முன்னாள் அமைச்சர் வேலுமணி வலியுறுத்தல்
/
கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர் நியமிக்கணும்; முன்னாள் அமைச்சர் வேலுமணி வலியுறுத்தல்
கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர் நியமிக்கணும்; முன்னாள் அமைச்சர் வேலுமணி வலியுறுத்தல்
கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர் நியமிக்கணும்; முன்னாள் அமைச்சர் வேலுமணி வலியுறுத்தல்
ADDED : செப் 23, 2025 05:20 AM

கோவை; தொண்டாமுத்துார் அருகே குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி ஊடுருவும் 'ரோலெக்ஸ்' எனும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கண்காணித்த போது, வனத்துறை உதவி கால்நடை மருத்துவர் விஜயராகவன், யானை தாக்கி காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, முன்னாள் அமைச்சர் வேலுமணி நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் வேலுமணி கூறியதாவது:
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், யானை - மனித முரண்பாடுகள் அதிகரித்து, 4.5 ஆண்டுகளில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. தாளியூர், நரசீபுரம், இக்கரை போளுவாம்பட்டி, அட்டுக்கல்பதி, கெம்பனுார், விராலியூர் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில், காட்டு யானைகளால் உயிர், பயிர் சேதங்கள் தொடர்ந்து நடக்கிறது. மக்களையும், வனத்துறையினரையும் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில், யானை - மனித முரண்பாடுகளால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க அகழிகள் வெட்டி, மின் வேலிகள் அமைத்தும் மனித உயிர்களைக் காக்க, அதிக அக்கறை காட்டப்பட்டது. வனத்துறையினருக்கும் புதிய ஜீப், டார்ச் லைட் உள்ளிட்ட உபகரணங்கள் அதிகம் வழங்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக வனத்துறைக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, கலெக்டரை சந்தித்து, மனு அளித்து வலியுறுத்தியுள்ளேன். யானைகளால் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, வனத்துறையினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
கடந்த நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி வழங்க, கலெக்டருக்கு கடிதம் வழங்கியும் இப்பணியில் இதுவரை முன்னேற்றம் இல்லை.
வன - கிராம எல்லையில் உருக்கு கம்பி வேலி அமைத்தால், மனித - வனவிலங்கு முரண்பாடுகள் தவிர்க்கப்படும். இவ்விவகாரத்தை அரசு சாதாரணமாக கையாளக்கூடாது. .
வேட்டைத்தடுப்புக் காவலர்களின் எண்ணிக்கை 200ல் இருந்து 50 ஆக குறைந்துவிட்டது. குறைந்த ஊதியம், பணிச்சுமை காரணமாக, அவர்களால் முழுமையாக பணியில் ஈடுபட முடிவதில்லை. ஊதிய உயர்வு வழங்கி, கூடுதல் வேட்டைத் தடுப்புக் காவலர் கள் நியமிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.