/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடையின்மை சான்று இன்றி போலீஸ் பூத்தில் விளம்பரம் எப்போதும் வைக்கக்கூடாது! உரிமம் வழங்கக்கூடாதென மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்
/
தடையின்மை சான்று இன்றி போலீஸ் பூத்தில் விளம்பரம் எப்போதும் வைக்கக்கூடாது! உரிமம் வழங்கக்கூடாதென மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்
தடையின்மை சான்று இன்றி போலீஸ் பூத்தில் விளம்பரம் எப்போதும் வைக்கக்கூடாது! உரிமம் வழங்கக்கூடாதென மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்
தடையின்மை சான்று இன்றி போலீஸ் பூத்தில் விளம்பரம் எப்போதும் வைக்கக்கூடாது! உரிமம் வழங்கக்கூடாதென மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 20, 2024 11:02 PM

கோவை; 'சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள போலீஸ் பூத்களில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைகளிடம் தடையின்மை சான்று பெறாமல் விளம்பர பலகை வைக்க, மாநகராட்சி உரிமம் தரக்கூடாது' என, கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது; டி.ஆர்.ஓ., ஷர்மிளா தலைமை வகித்தார். மாவட்ட அளவில் நடந்த சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில், 32 பேர் உயிரிழந்திருப்பதும், ஹெல்மெட் அணியாமல் சென்றதால், 12 பேர் தலையில் காயம் அடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முன் இறந்தது தொடர்பாகவும் விளக்கப்பட்டது. ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
பின், லங்கா கார்னர் முதல் அரசு மருத்துவமனை மற்றும் ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சிக்னல் சந்திப்பு, ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு மற்றும் தனியார் பள்ளி முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 'அம்மா' உணவகம் முன்புள்ள பஸ் நிறுத்தத்தை, மருத்துவமனை புது கட்டடம் முன் மாற்றியமைக்கவும், இரு சக்கர வாகனங்களை பஸ் முனையத்துக்கு முன்புள்ள காலியிடத்தில் நிறுத்தலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
தனியார் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் காலை நேரத்தில் அழைத்து வரும்போது, வளாகத்துக்குள் சென்று இறக்கி விட அனுமதிக்கப்படுகின்றனர்; மாலை நேரத்தில் அனுமதிப்பதில்லை. மாலை நேரத்திலும் அனுமதித்தால், அச்சமயத்தில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது. இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகத்திடம் பேசி, தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
காந்திபுரம் மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், நுாறடி ரோட்டுக்கும், பாரதியார் ரோட்டுக்கும் செல்வதற்கு இறங்கு தளங்கள் கட்டுவதற்கு, தேவையான நிலத்தை கையகப்படுத்தி, பணியை உடனடியாக துவக்க, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் லிப்ட் வசதியுடன் நடை மேம்பாலம் அமைக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.
ரோட்டின் நடுவே வைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனை சாவடிகளில் விளம்பரம் பலகை வைத்திருப்பது தொடர்பாக, சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரான, 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' செயலாளர் கதிர்மதியோன் கேள்வி எழுப்பினார். அதற்கு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 'ஐ.ஆர்.சி., விதிமுறைப்படியும், அரசாணைப்படியும் தடையின்மை சான்று வழங்க முடியாது' என, திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அதனால், போலீஸ் பூத்களில் விளம்பரங்கள் ஒட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் தடையின்மை சான்று பெற்ற பின்பே, விளம்பரத்துக்கான உரிமத்தை மாநகராட்சி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், சாலைப்பணி மேற்கொள்ளும்போது, பாதாள சாக்கடை மேனுவல் உயரம் சாலை மட்டத்துக்கு மட்டுமே அமைக்க வேண்டும்; மீண்டும் சாலை அமைக்கும்போது உயரத்தை அதிகரிக்கக்கூடாது என்றும், மாநகராட்சிக்கு அறிவுரை வழங்கப்பட்டது.