/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறிவுரை
/
பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறிவுரை
ADDED : பிப் 12, 2025 11:06 PM
வால்பாறை; வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பாதயாத்திரை செல்லும் முருகபக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வால்பாறையில் உள்ள, பழநி பாதயாத்திரைக்குழு சார்பில் ஆண்டு தோறும் பழநிக்கு, நுாற்றுக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியிலிருந்து முருகபக்தர்கள், அட்டகட்டி, ஆழியாறு, உடுமலை வழியாக பழநிக்கு நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அட்டகட்டியிலிருந்து ஆழியாறு வரையிலான மலைப்பாதையில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, வாட்டர்பால்ஸ் - ஆழியாறு இடையே யானைகள் அவ்வப்போது, ரோட்டை கடக்கின்றன. பகல் நேரத்தில் கூட யானைகள் நடமாடுவதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
யானைகள் நடமாட்டம் காரணமாக, மாலை, 6:00 மணிக்கு மேல் வால்பாறைக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன் கூறியதாவது:
வாட்டர்பால்ஸ் - ஆழியாறு இடைய யானைகள் நடமாட்டம் உள்ளதால், வால்பாறையிலிருந்து பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்கள் காலை நேரத்தில் புறப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு முன்னதாக ஆழியாறு சோதனை சாவடி வந்தடைய வேண்டும்.
முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் போது, மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவர்,' என்றார்.