/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர்களுக்கு மானியத்தில் நுண்ணுாட்ட கலவை விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
/
பயிர்களுக்கு மானியத்தில் நுண்ணுாட்ட கலவை விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
பயிர்களுக்கு மானியத்தில் நுண்ணுாட்ட கலவை விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
பயிர்களுக்கு மானியத்தில் நுண்ணுாட்ட கலவை விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
ADDED : மார் 01, 2024 10:48 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு, நுண்ணுாட்ட கலவை மானியத்தில் பெற வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் பயிர்களில் வளர்ச்சி குறைபாடு போன்றவைகளை கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு, வேளாண்மை துறை சார்பாக நுண்ணுாட்டகலவை, 50 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.
பயிர்களின் வளர்ச்சிக்கு, நுண்ணுாட்ட கலவையில்,16 வகையான சத்துக்கள்இருக்கிறது. இதில், முதன்மை சத்துக்களாக, கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் பேரூட்ட சத்துக்களான, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை உள்ளது. மற்றும் இரண்டாம் நிலை சத்துக்களான, கால்சியம், மெக்னீசியம், சல்பர் உள்ளது.
பயிர்களில், நுண்ணுாட்ட சத்துக்களாக, இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், மாங்கனிசு, மாலிப்டினம், மற்றும் குளோரின் உள்ளது.
முதன்மை சத்துக்கள், காற்று மற்றும் நீரின் வாயிலாக பயிர்களுக்கு கிடைக்கின்றன. மற்ற சத்துக்கள், மண்ணில் உள்ள கனிமங்கள் மற்றும் அங்கக பொருட்கள் நுண்ணுயிரிகளால் மக்குவதன் வாயிலாகவும் பயிர்களுக்கு கிடைக்கின்றன.
பயிர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினை சரி செய்திட, ரசாயன உரங்கள் இட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நவீன வேளாண்மையில் பேரூட்ட சத்து ரசாயன உரங்களுக்கு முன்னுரிமை அளித்து, பயிர் கழிவுகள் மற்றும் தொழு உரம் உபயோகப்படுத்தாமல் இருப்பதினால், நுண்ணுாட்ட சத்துக்களின் குறைபாடு மேலும் அதிகரித்துள்ளது.
இதை தவிர்க்க, தற்போது பயிர்களுக்கு, நுண்ணுாட்டஉரங்கள் இடும் தொழில்நுட்பம் பரிந்துரை செய்யப்படுகிறது. மண் பரிசோதனை செய்திடும் போது, பேரூட்டம் மற்றும் நுண்ணுாட்டச் சத்துக்களை ஆய்வு செய்து மண் பரிசோதனை நிலையங்களின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
நுண்ணுாட்ட கலவைகளை உழவன் செயலியில் விண்ணப்பித்தும் அல்லது வேளாண் அலுவலகத்திலும் பெறலாம். மேலும், விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் மற்றும் கிணத்துக்கடவு மற்றும் வடசித்துார் வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

