/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானநிலைய விரிவாக்கத்தில் வேண்டும் வேகம்!: உயருது பயணிகள் எண்ணிக்கை
/
விமானநிலைய விரிவாக்கத்தில் வேண்டும் வேகம்!: உயருது பயணிகள் எண்ணிக்கை
விமானநிலைய விரிவாக்கத்தில் வேண்டும் வேகம்!: உயருது பயணிகள் எண்ணிக்கை
விமானநிலைய விரிவாக்கத்தில் வேண்டும் வேகம்!: உயருது பயணிகள் எண்ணிக்கை
ADDED : ஏப் 26, 2025 11:18 PM

கோவை: கடந்த நிதியாண்டில் பயணிகள் பயன்பாட்டில், புதிய உச்சத்தை கோவை சர்வதேச விமான நிலையம் எட்டியுள்ளதால், தேவையான விரிவாக்கப்பணிகளை விரைந்து மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும், மும்பை, டில்லி, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமான நிலைய ஆணைய தகவல்களின்படி, கடந்த நிதியாண்டில், அதிகளவாக, கோவை விமான நிலையத்தில் இருந்து, 32.53 லட்சம் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்துள்ளனர்.
இது, முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், 12 சதவீதம் அதிகம். இதில், சர்வதேச பயணிகள், 2.63 லட்சம், உள்நாட்டு பயணிகள், 29.89 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில், 20 ஆயிரம் விமானங்கள், சர்வதேச அளவில், 1,814 விமானங்கள் என, 21 ஆயிரத்து, 833 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், 19 சதவீதம் அதிகம்.
2023 - 24 நிதியாண்டில், சர்வதேச பயணிகள், 2.11 லட்சம், உள்நாட்டு பயணிகள், 26.93 லட்சம் என, மொத்தம், 29.04 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். உள்நாட்டில், 17 ஆயிரம் விமானங்கள், சர்வதேச அளவில், 1,339 விமானங்கள் என, 18 ஆயிரத்து, 396 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து வருவதால், விமான நிலைய ஆணையம் கோவை விமான நிலையத்துக்கு, தேவையான வசதிகளை விரைந்து ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஷ் கூறுகையில், ''தமிழகத்தின் மேற்கு மண்டல வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விமான நிலையத்துக்கு தேவையான வசதிகளை செய்து தர விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விமான நிலையத்தில் மறுசீரமைப்பை துரிதப்படுத்த வேண்டும். டில்லி, சென்னை, புனே நகரங்களுக்கு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
''கோல்கட்டா, அகமதாபாத், மங்களூரு, திருவனந்தபுரத்துக்கு புதிய சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
''துபாய், தோகா, கொழும்பு, பேங்க்காக், கோலாலம்பூர் ஆகிய நாடுகளுக்கும் விமான சேவையை துவங்க வேண்டும். பிரத்யேக சரக்கு போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.