/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகமெடுக்கிறது விமான நிலைய விரிவாக்கப் பணி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள புதிய வடிவமைப்புகள்
/
வேகமெடுக்கிறது விமான நிலைய விரிவாக்கப் பணி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள புதிய வடிவமைப்புகள்
வேகமெடுக்கிறது விமான நிலைய விரிவாக்கப் பணி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள புதிய வடிவமைப்புகள்
வேகமெடுக்கிறது விமான நிலைய விரிவாக்கப் பணி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள புதிய வடிவமைப்புகள்
ADDED : டிச 09, 2024 05:31 AM

கோவை : விமான நிலைய விரிவாக்கத்துக்கான புதிய வடிவமைப்புகள், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதால், விரைவில் அதுகுறித்த ஆய்வு நடக்க உள்ளது. ஆய்வுக்குப் பின் விரிவாக்கப்பணி வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை விமான நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, கடந்தாண்டுகளை விட தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. இதைக்கருத்தில் கொண்டு, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 2010ம் ஆண்டே நிலம் கையகப்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நடப்பாண்டு, நிலம் கையகப்படுத்தும் பணி வேகம் எடுத்தது.
விரிவாக்கத்துக்கு சிங்காநல்லுார், உப்பிலிபாளையம், காளப்பட்டி கிழக்கு, மேற்கு, நீலாம்பூர், இருகூர் கிராமங்களில், 634.82 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு ரூ.2088.92 கோடி ஒதுக்கி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, கையகப்படுத்திய, 451.74 ஏக்கர் நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் சேர்த்து, 472.32 ஏக்கர் நிலம் எவ்வித நிபந்தனையுமின்றி, இலவசமாக 99 ஆண்டு குத்தகைக்கு, கடந்த ஆக., மாதம் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது விரிவாக்கப்பணிகள் வேகம் எடுத்துள்ளன. அதன்படி, விரிவாக்கத்துக்கான புதிய வடிவமைப்புகள், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை விமானநிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் முன், ஒப்படைக்கப்பட்ட நிலத்தில், சுற்றுச்சுவர் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கத்துக்கான வடிவமைப்புகள்(டிசைன்கள்) பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அவற்றில் சுற்றுச்சூழல் துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் ஆய்வு நடத்துவர். ஆய்வுக்குப் பின், அவர்கள் வடிவமைப்பில் ஏதேனும் மாற்றம் செய்ய அறிவுறுத்தினால், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் துவங்கும்' என்றார்.