/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவியர்களை பாதுகாக்கும் 'அகல் விளக்கு' திட்டம்; 10 கட்டளைகளை பின்பற்ற அறிவுரை
/
பள்ளி மாணவியர்களை பாதுகாக்கும் 'அகல் விளக்கு' திட்டம்; 10 கட்டளைகளை பின்பற்ற அறிவுரை
பள்ளி மாணவியர்களை பாதுகாக்கும் 'அகல் விளக்கு' திட்டம்; 10 கட்டளைகளை பின்பற்ற அறிவுரை
பள்ளி மாணவியர்களை பாதுகாக்கும் 'அகல் விளக்கு' திட்டம்; 10 கட்டளைகளை பின்பற்ற அறிவுரை
ADDED : ஆக 20, 2025 09:52 PM

பெ.நா.பாளையம்; தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் இணைய வழி குற்றங்களுக்கு மாணவியர்கள் ஆளாகாமல் இருக்க 'அகல் விளக்கு' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் படிக்கும் மாணவியர்கள் இணைய வழியில் நடக்கும் குற்றங்களில் சிக்காமல் இருக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ஒன்பது முதல் பிளஸ், 2 வரை படிக்கும் மாணவியருக்கு டிஜிட்டல் வாயிலாக உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, அகல் விளக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அகல் விளக்கு என்ற இணைய பாதுகாப்பு வழிகாட்டி சிற்றேடு வெளியிட்டுள்ளது. அதில், இணையத்தில் பாதுகாப்பாக இருக்க மாணவியர் செய்ய வேண்டிய பத்து விஷயங்கள் குறித்து தொகுத்து கூறப்பட்டுள்ளன.
முதலாவதாக பெயர், முகவரி, மொபைல் எண், பள்ளியின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் ஒருபோதும் பகிரக்கூடாது. இரண்டாவதாக, எளிதில் யூகிக்க முடியாத வலிமையான பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும். இதை யாருடனும் எக்காரணத்தைக் கொண்டும் பகிரக்கூடாது.
மூன்றாவதாக, பாடங்களில் சந்தேகம் கேட்பது போல பிரச்னைகள் வந்தால், உடனடியாக ஆசிரியர்களிடம், அது குறித்து பகிர்வதற்கு முன் வர வேண்டும். நான்காவதாக, அறிமுகம் இல்லாத சந்தேகத்திற்குரிய நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் வரும் இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது. ஐந்தாவதாக, யாரேனும் இணையத்தின் வழியாக துன்புறுத்தினால், அது குறித்து உடனடியாக பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ மனம் விட்டு பேசி, பயத்தை போக்கி அது குறித்து புகார் செய்ய வேண்டும்.
ஆறாவதாக, இணையத்தில் யாரேனும் துன்புறுத்தி, விருப்பத்துக்கு மாறாக நடந்து கொண்டால் உடனடியாக அவர்களுடைய எண்களை பிளாக் செய்து, ரிப்போர்ட் செய்ய வேண்டும். ஏழாவதாக, மாணவியர் போட்டோவை மார்பிங் செய்தோ அல்லது தவறான நோக்கத்துடன் பரப்பினால், அது குறித்து சட்டரீதியாக உடனடியாக புகார் செய்யலாம். எட்டாவதாக, சைபர் குற்றங்கள் குறித்து, 1930 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.
ஒன்பதாவதாக, கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் நம்பகமான ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். பத்தாவதாக, இணைய வழி பயன்பாட்டு நேரத்துக்கு என கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு, அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இந்த பத்து கட்டளைகளை பின்பற்றினால் இணையவழி குற்றங்களில் சிக்கி பாதிக்கப்படாமல் இருக்கலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.