ADDED : ஜூன் 21, 2025 12:32 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை நேற்று மதியம், 100 அடியை எட்டியது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் முக்கிய அணையாக உள்ளது.இந்த அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்திற்கு வழங்கப்படுகிறது. இது தவிர, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆழியாறு ஆறு மூலமாகவும்; புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு வேட்டைக்காரன்புதுார் கால்வாய் வழியாகவும் தண்ணீர் வழங்கப்படுகிறது.கடந்த சில வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்து வந்ததால், அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி, ஆழியாறு அணை நீர்மட்டம், 99.45 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,726 கனஅடி நீர்வரத்து இருந்தது. வினாடிக்கு, 161 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
தொடர்ந்து நீர் வரத்து இருந்ததால், நேற்று மதியம், அணை நீர்மட்டம், 100 அடியை எட்டியது. ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு அணைக்கு, மேல் ஆழியாறு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது,' என்றனர்.