/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையில் காலியாக கிடக்கும் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பதவி ஊழல் பெருக வழிவகுப்பதாக குற்றச்சாட்டு
/
பாரதியார் பல்கலையில் காலியாக கிடக்கும் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பதவி ஊழல் பெருக வழிவகுப்பதாக குற்றச்சாட்டு
பாரதியார் பல்கலையில் காலியாக கிடக்கும் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பதவி ஊழல் பெருக வழிவகுப்பதாக குற்றச்சாட்டு
பாரதியார் பல்கலையில் காலியாக கிடக்கும் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பதவி ஊழல் பெருக வழிவகுப்பதாக குற்றச்சாட்டு
ADDED : ஏப் 21, 2025 06:38 AM
கோவை : பாரதியார் பல்கலை சிண்டிகேட்டில், பல்கலை துணைவேந்தர், உறுப்பு கல்லுாரி ஆசிரியர்கள் பிரிவு, பல்கலை ஆசிரியர்கள் பிரிவு, பொதுப்பிரிவு, துணைவேந்தரால் நியமிக்கப்படும் ஒரு இணை பேராசிரியர் மற்றும், துணை பேராசிரியர் பிரிவுகள், அரசால் நியமிக்கப்படும் ஐந்து கல்லுாரி செயலாளர்கள் பிரிவு என்ற வகையில், சிண்டிகேட் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
செனட்டில், துணைவேந்தர் பொறுப்பு காலியாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இணை பேராசிரியர், துணை பேராசிரியர், உறுப்புக் கல்லுாரிகள், சுயநிதிக் கல்லுாரிகள் பிரிவுகளில் என, மொத்தம், 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பு காலியாக உள்ளது.
பட்டதாரிகளுக்கான பிரிவில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான உறுப்பினர் பொறுப்பும் காலியாக உள்ளது.
சிண்டிகேட், செனட் குழுக்கள், உறுப்பினர்களுக்கான இடம், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. ஆனால், பாரதியார் பல்கலை நிர்வாகம், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்கல்வித்துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளது.
துணைவேந்தர் இல்லாத நிலையில், பல்கலை நிர்வாகத்தின் நடவடிக்கைகள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் நலனுக்கான திட்டங்கள், புதிய ஆராய்ச்சிகள் உள்ளிட்ட செயல்களை சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் மேற்கொள்வர்.
கடந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அதற்கான செலவுகள் குறித்து இக்குழுக்களின் உறுப்பினர்களே கேள்வி எழுப்புவர். அடுத்த நிதியாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைப்பர்.
குறிப்பாக பல்கலையில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்ப, இவ்விரு குழுக்களின் உறுப்பினர்களால் மட்டுமே முடியும்.
அப்படி இருக்கையில், சிண்டிகேட், செனட் குழுக்களின் பெரும்பாலான பொறுப்புகள் காலியாக இருப்பது ஊழல், முறைகேடுகளை மறைக்கவே என, குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதைப்போக்க பல்கலை நிர்வாகம், உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்கலை பேராசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
பெயர் வெளியிட விரும்பாத, பல்கலை உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மே மாதம் பல சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள், முக்கிய பொறுப்புகளுக்கான காலம் நிறைவடைகிறது. புதிய உறுப்பினர், முக்கிய பொறுப்புகளுக்கான தகுதியான நபர்கள் அடங்கிய, பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அவை நிரப்பப்படும்' என்றார்.