/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம்; நவ.16, 17, 23, 24ல் சிறப்பு முகாம் மறந்திடாதீங்க!
/
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம்; நவ.16, 17, 23, 24ல் சிறப்பு முகாம் மறந்திடாதீங்க!
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம்; நவ.16, 17, 23, 24ல் சிறப்பு முகாம் மறந்திடாதீங்க!
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம்; நவ.16, 17, 23, 24ல் சிறப்பு முகாம் மறந்திடாதீங்க!
ADDED : நவ 07, 2024 08:31 PM

பெ.நா.பாளையம்: வரைவு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்காக இம்மாதம், 16, 17, 23, 24ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள தேர்தல் துறையினர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், தங்களுடைய பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தேர்தல் துறையின் இணைய தளம் (www.elections.tn.gov.in) வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
அதில், திருத்தம் ஏதாவது மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தால், தமிழகம் முழுவதும் இம்மாதம் நான்கு நாட்கள் நடக்கும் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதாவது, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்காக அனைத்து வாக்குசாவடி உள்ள இடங்களிலும், அதாவது, கடைசியாக நடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்த இடங்களில் நவ., 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. அதில் விண்ணப்பங்களை அளிக்கலாம். 'ஆன்லைன்' வாயிலாக அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவ., 28ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச., 26ம் தேதிக்குள் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல், 2025ம் ஆண்டு ஜன., 6ம் தேதி வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள தேர்தல் துறையின் இணையதளத்தில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உரிய விண்ணப்பங்களை, தேர்தல் துறை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதில், படிவம், 6 என்பது புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம் ஆகும். படிவம், 6 ஏ என்பது வெளிநாடு வாழ் வாக்காளர் ஒருவர் பெயரை பட்டியலில் சேர்ப்பதற்கு பயன்படுத்தலாம். படிவம், 6 பி என்பது வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மை என சான்று அளிப்பது ஆகும். படிவம், 7 என்பது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோருவதற்கான விண்ணப்பம் ஆகும். படிவம், 8 என்பது வீட்டை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது இப்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே மாற்றினாலோ இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்யவும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும் இப்படிவத்தை பயன்படுத்தலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். முகவரி சான்றாக குடிநீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீது, ஆதார் அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட பாங்க், தபால் அலுவலகத்தின் இப்போதைய கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட், வருவாய் துறைகளில் நில உரிமை பதிவுகள், பதிவு செய்யப்பட்ட வாடகை பத்திரம், பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம். வயது சான்றாக பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 சான்றிதழ், இந்திய பாஸ்போர்ட் ஆகியவற்றை அளிக்கலாம். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.