கருமத்தம்பட்டி, சூலுாரில் அம்மா உணவகம் அமைக்க எதிர்பார்ப்பு ! அதிகரிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை
கருமத்தம்பட்டி, சூலுாரில் அம்மா உணவகம் அமைக்க எதிர்பார்ப்பு ! அதிகரிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை
UPDATED : ஜூன் 17, 2026 05:06 PM
ADDED : ஜூன் 17, 2026 05:00 PM

சூலுார்: கருமத்தம்பட்டி மற்றும் சூலுாரில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு, தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகள், சுற்றுவட்டார கிராமங்களில், நுாற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்கள் மற்றும் ஜவுளி தொழில் சார்ந்த ஏராளமான தொழில்கள் நடக்கின்றன. இவைகளில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலானோர், வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
வேலைக்காக குடும்பத்தை விட்டு வந்து இப்பகுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் இவர்கள், வேலை முடிந்து வீட்டுக்கு சென்று சமைத்து சாப்பிடுவது என்பது இயலாத நிலையும், கடைகளுக்கு சென்று அதிக விலை கொடுத்து சாப்பிட வேண்டிய நிலையும் உள்ளது. ஈட்டும் வருவாயில், குறிப்பிட்ட தொகை உணவுக்காக செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பது தான், அவர்களுக்கான தற்போதைய தேவையாக உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 'அம்மா' உணவகங்கள் அமைக்கப்பட்டு, குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுகிறது. அதனால், அப்பகுதி தொழிலாளர்கள், முதியவர்களுக்கு உணவு பிரச்னை தீர்ந்தது. அதேபோல், கருமத்தம்பட்டி, சூலுார் பகுதியிலும் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:
கருமத்தம்பட்டி, சூலுார் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் உணவு அத்தியாவசிய தேவையாக உள்ளது. சாதாரண ஓட்டல்களில் சாப்பிட்டால் கூட, ஒரு நபருக்கு, ஒரு வேளைக்கு, 100 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. குறைந்த சம்பளம் பெறும் எங்களால், தினசரி அதிக செலவு செய்ய முடியாது. மேலும், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் மலிவு விலை உணவு கிடைக்குமா என, ஏக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கருமத்தம்பட்டி, சூலுார் பகுதியில், அம்மா உணவகங்கள் துவக்கினால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஏழை, எளியவர்கள் வயிறு நிறையும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
