ADDED : மார் 07, 2026 06:36 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் தையல்நாயகி உடனமர், வைத்தியநாதர் மற்றும் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடந்தது.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், அரசமர பிள்ளையார் கோவில் வீதியில், புதிதாக கட்டப்பட்ட தையல் நாயகி உடனமர் வைத்தியநாதர் கோவில் மற்றும் திருமடத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை ஆடலரசுவின் குருபூஜை விழா நடந்தது. இதில் வேள்வி வழிபாடு, சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஒப்பனை, பேரொளி வெளிப்பாடு நடந்தன.
இரவு அம்மையப்பர், நால்வர் பெருமக்கள், 63 நாயன்மார்களின் திருவீதி உலா கோ--ஆப்ரேடிவ் காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டது. முன்னதாக சுவாமிகளுக்கும், 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு பூஜை செய்தனர்.
தொடர்ந்து திருவீதி உலா முன்பாக, சங்கொலியும் திருக்கயிலாய வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க, நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மையப்பர், நால்வர்கள், 63 நாயன்மார்கள் பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, மேட்டுப்பாளையம் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

