/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி பணியாளர்கள் அதிருப்தி: பொறுப்பு படி உயர்த்தாததால் சிக்கல்
/
அங்கன்வாடி பணியாளர்கள் அதிருப்தி: பொறுப்பு படி உயர்த்தாததால் சிக்கல்
அங்கன்வாடி பணியாளர்கள் அதிருப்தி: பொறுப்பு படி உயர்த்தாததால் சிக்கல்
அங்கன்வாடி பணியாளர்கள் அதிருப்தி: பொறுப்பு படி உயர்த்தாததால் சிக்கல்
ADDED : ஜன 14, 2025 06:57 AM
பொள்ளாச்சி; சத்துணவு அமைப்பாளர்களுக்கு மட்டும் கூடுதல் பொறுப்பு படி உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளதால், அங்கன்வாடி பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கடந்த டிச., மாதம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒரு நாளுக்கு, 20 ரூபாய் வீதம் மாதத்துக்கு, 600 ரூபாய் என, வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்பு படியினை, ஒரு நாளுக்கு, 33 ரூபாய் வீதம், ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது, என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு மைய அமைப்பாளர்களுக்கு மட்டும் கூடுதல் பொறுப்பு படி வழங்கியதால், அங்கன்வாடி பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இங்கு வரும் குழந்தைகளை பாதுகாப்பாக பாரமரித்து, அவர்களுக்கு தேவையான உணவு வழங்கி, அடிப்படை கல்வியும் கற்றுத்தரப்படுகிறது.
ஆட்கள் பற்றாக்குறையால், கூடுதல் மையங்களை அங்கன்வாடி பணியாளர்கள் கவனிப்பது பணிச்சுமையாக உள்ளது.
எப்போதும், சத்துணவு அமைப்பாளர்களுக்கான அறிவிப்பு வெளிவரும்போது, அங்கன்வாடி பணியாளர்களுக்கான அறிவிப்பும் சேர்ந்து வெளியிடப்படும்.
தற்போது, சத்துணவு அமைப்பாளர்களுக்கு மட்டும் கூடுதல் பொறுப்பு படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொறுப்பு படி உயர்த்தி வழங்காதது வேதனையாக உள்ளது.
அரசு உரிய கவனம் செலுத்தி, அங்கன்வாடி பணியாளர்களுக்கும் கூடுதல் பொறுப்பு படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.