/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனை கட்டுமான பணிக்கு மரங்களை வெட்ட ஏலம் அறிவிப்பு : மாற்று திட்டம் செயல்படுத்தலாமே
/
மருத்துவமனை கட்டுமான பணிக்கு மரங்களை வெட்ட ஏலம் அறிவிப்பு : மாற்று திட்டம் செயல்படுத்தலாமே
மருத்துவமனை கட்டுமான பணிக்கு மரங்களை வெட்ட ஏலம் அறிவிப்பு : மாற்று திட்டம் செயல்படுத்தலாமே
மருத்துவமனை கட்டுமான பணிக்கு மரங்களை வெட்ட ஏலம் அறிவிப்பு : மாற்று திட்டம் செயல்படுத்தலாமே
ADDED : நவ 06, 2025 11:19 PM
ஆனைமலை: வேட்டைக்காரன்புதார் அரசு மருத்துவமனை கட்டட பணிக்காக எட்டு மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளன.
ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில், தினமும், 200 வெளிநோயாளிகளும், 15 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்ககம், 3.50 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, தமிழக அரசின் மருத்துவப்பணிகள் கட்டடம் மற்றும் பராமரிப்புத்துறையினர், 150 ஆண்டுகள் பழமையான கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்ட அளவீடு செய்து பூர்வாங்க பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
புதிய கட்டட பணிக்காக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 11 மரங்கள் வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கட்டடப்பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால், இயற்கை ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில் மொத்தம் உள்ள, 11 மரங்களில், இடையூறு இல்லாத வேப்ப மரத்தை வெட்ட வேண்டாம் என்றும், இரண்டு வேப்ப மரங்கள் மறு நடவு செய்யவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மீதம் உள்ள, எட்டு மரங்கள் வெட்டப்பட உள்ளன. இந்த மரங்களை வெட்டுவதற்கு பதிலாக மாற்று திட்டம் செயல்படுத்தினால் மரங்களை பாதுகாக்க முடியும்.இங்கு ஓட்டு கட்டடத்தை அகற்றினால், ஐந்து வேம்பு மரங்களை வெட்டாமல் தவிர்க்க முடியும்.
மேலும், சித்தா பிரிவில் இருந்த அகத்தியர் சிலை கட்டடப்பணிக்காக அகற்றப்பட்டுள்ளது. இந்த சிலை மீண்டும் நிறுவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கட்டுமானப்பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள் குறித்து அரசால் நியமிக்கப்பட்ட குழு வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது. அக்குழு பரிந்துரையின் பேரில் இடையூறாக உள்ள மரங்கள் மட்டும் வெட்டப்படுகின்றன.
அதற்கு மாற்றாக, கூடுதல் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கட்டுமானப்பணிகள் முடிந்ததும் அகத்தியர் சிலை அமைக்கப்படும்,' என்றனர்.

