/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி!
/
அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி!
ADDED : செப் 23, 2024 12:28 AM

'தினமலர்' சார்பில் நேற்று துவங்கிய, 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்' போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள், வெற்றி, தோல்வி பாராமல் திறமையை கொண்டாடினர்.
'தினமலர்' நாளிதழ் சார்பில், 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2024' போட்டிகள், கோவை நவ இந்தியா அருகே, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியிலும், அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரியிலும் நேற்று துவங்கின.
'பெடரேஷன் ஆப் கோயம்புத்துார் அபார்ட்மென்ட் அசோசியேசன்ஸ்' இணைந்து நடத்திய இப்போட்டியில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
'நாக் அவுட்' முறையில் டென்னிஸ் பந்து கொண்டு, 10 ஓவர்கள் நடத்தப்பட்ட நேற்றைய போட்டிகளில், இரு மைதானங்களிலும் தலா நான்கு அணிகள் என, எட்டு அணிகள் விளையாடின.
இந்துஸ்தான் கல்லுாரி மைதானத்தில் காலை, 8:00 மணிக்கு, நேரு நகர், மவுன்ட் ரெயின் டிராப் அணியும் (ரெயின்போ சூப்பர் கிங்ஸ்), நஞ்சுண்டாபுரம் ஆர்.ஆர். துர்யா அணியும் மோதின. 'டாஸ் வின்' செய்த ஆர்.ஆர்., துர்யா அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்த ரெயின்போ சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மஞ்சுநாத், 55 ரன்களும், கிருஷ்ணராஜ், 50 ரன்களும் எடுத்து விளாசினர். 10 ஓவர் முடிவில், நான்கு விக்கெட்களை இழந்து, 141 ரன்களை வீரர்கள் குவித்தனர்.
ஆர்.ஆர். துர்யா அணி வீரர் மதன் இரு விக்கெட், அனுஷ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து, ஆர்.ஆர். துர்யா அணி வீரர்கள் பேட்டிங் செய்தனர். அதிகபட்சமாக, பிரசாந்த், 42 ரன்கள் குவித்தார். 10 ஓவர் முடிவில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 123 ரன்கள் எடுத்தனர்.
ரெயின்போ சூப்பர் கிங்ஸ் வீரர் யோத்தீஷ், இரு விக்கெட்களை வீழ்த்த, அணியானது, 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக விளையாடிய ரெயின்போ சூப்பர் கிங்ஸ் வீரர் மஞ்சுநாத்துக்கு, இந்துஸ்தான் மருத்துவமனை செயல் இயக்குனர் சதீஷ் பிரபு, ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் காலை, 8:00 மணிக்கு, துடியலுார் காசாகிராண்ட் காஸ்மோஸ் அணியும், ரமணி லேக் கார்டன் அணியும் மோதின. 'டாஸ்' வென்ற ரமணி லேக் கார்டன் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்த காஸ்மோஸ் அணி, 68 ரன்களை குவித்தது. 69 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய ரமணி லேக் கார்டன் அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில், 15 ரன்கள் எடுத்தும், இரு விக்கெட்களை வீழ்த்திய காசாகிராண்ட் காஸ்மோஸ் அணி வீரர் சரவணனுக்கு, 'வால்ரஸ்' நிறுவனர் டேவிட், ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
தொடர்ந்து, 10:30 மணிக்கு, துடியலுார் மில்லினியல் சிட்டி அணியும், ஆர்.எஸ்.புரம், ரமணிஸ் கோசி டவர்ஸ் அணியும் விளையாடின. 'டாஸ்' வென்ற மில்லினியல் சிட்டி அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் இறங்கிய ரமணிஸ் கோசி டவர்ஸ் அணி வீரர்கள்,87 ரன்கள் குவித்தனர்.
அடுத்து, 88 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த மில்லினியல் சிட்டி அணியினர், எட்டு விக்கெட்களை இழந்து, 57 ரன்கள் எடுத்தனர். 30 ரன்கள் வித்தியாசத்தில், ரமணிஸ் கோசி டவர்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், அந்த அணி வீரர் தர்சன், 17 ரன்கள் எடுத்து, இரு விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
காலிறுதியில் களம்
சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் மதியம் 3:00 மணிக்கு நடந்த போட்டியில், காசாகிராண்ட் காஸ்மோஸ் அணியும், ரமணிஸ் கோசி டவர்ஸ் அணியும் விளையாடின. 'டாஸ்' வென்ற காசாகிராண்ட் காஸ்மோஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்து, 10 ஓவர் முடிவில், 76 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ரமணிஸ் கோசி டவர்ஸ் அணி, எட்டு ஓவர்களில், இரு விக்கெட் இழப்புக்கு, 77 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரண்டு விக்கெட்களை வீழ்த்திய காஸ்மோஸ் அணி பிரேம் நிசாந்திற்கு, பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி,ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
வரும், 29ம் தேதி இதேபோல், எட்டு அணிகள் விளையாடவுள்ளன. அக்., 2ம் தேதி இந்துஸ்தான் கல்லுாரி மைதானத்தில் காலையில் அரையிறுதியும், மதியம் இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது.