/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடகை வணிக கட்டடங்களுக்கு வரி விலக்கா? ஜி.எஸ்.டி., கவுன்சில் கூறும் விளக்கம்
/
வாடகை வணிக கட்டடங்களுக்கு வரி விலக்கா? ஜி.எஸ்.டி., கவுன்சில் கூறும் விளக்கம்
வாடகை வணிக கட்டடங்களுக்கு வரி விலக்கா? ஜி.எஸ்.டி., கவுன்சில் கூறும் விளக்கம்
வாடகை வணிக கட்டடங்களுக்கு வரி விலக்கா? ஜி.எஸ்.டி., கவுன்சில் கூறும் விளக்கம்
ADDED : டிச 24, 2024 11:24 PM

கோவை: வாடகை வணிக கட்டடங்களுக்கான ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்து தவறான தகவல்கள் வெளியாகி, வணிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த வரிஆலோசகர் ராஜபாலு கூறியதாவது: கடந்த, 21ம் தேதி ராஜஸ்தானில் நடந்த 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பான அறிவிப்புகள் வெளியான நிலையில், சில தவறான புரிதல்களும் வெளியாகி, வணிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வாடகைக் கட்டடத்தில் செயல்படும் வணிக நிறுவனங்கள் செலுத்தும் வாடகைக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வாடகை வணிக கட்டடங்களுக்கான வரி விதிப்பால் சிறு, குறு வணிகர்கள் மற்றும் 'கலவைத் திட்ட வணிகர்கள்' பாதிக்கப்படுவதாக, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்துக்கு பல்வேறு பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில், வாடகை கட்டடங்களுக்கு, வாடகை செலுத்தும் கலவைத் திட்ட வணிகர்களுக்கு மட்டும் விலக்கு வழங்குவதாக தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கலவைத் திட்ட வணிகர், வாடகைக் கட்டடத்தில் தன் வணிக நிறுவனத்தை நடத்தும்போது, வாடகை பெறும் கட்டட உரிமையாளர், ஜி.எஸ்.டி., பதிவு பெறாதவராக இருந்தால், ஆர்.சி.எம்., முறையில், 18 சதவீதம் வரி செலுத்த வேண்டியதில்லை.
மாறாக, வணிக நிறுவனத்துக்கு கட்டடத்தை வாடகைக்கு விட்டுள்ள நபர், ஜி.எஸ்.டி., பதிவு பெற்றவராக இருந்தால் கலவைத் திட்ட வணிகர் வாடகையுடன், 18 சதவீத வரியை சேர்த்தே செலுத்த வேண்டும். இந்தத் தொகையை பதிவு பெற்ற வணிகர் அரசுக்கு செலுத்துவார்.
மற்றபடி வாடகைக் கட்டடத்தில் செயல்படும் நிறுவனங்கள் செலுத்தும் வாடகைத் தொகை மீதான, 18 சதவீத வரி விதிப்புத் தொடர்பாக பிற விளக்ககங்கள் இதுவரை கொடுக்கப்படவில்லை என்பதை வணிகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.