ADDED : நவ 06, 2024 10:28 PM
கோவை; கோவையில் நடக்கும் ராணுவ தேர்வில் பங்கேற்க வந்த இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் நவ.,4ம் தேதி முதல், 10ம் தேதி வரை கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
இத்தேர்வு மூலம் காலியாக உள்ள, 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களை நிரப்பப்படும்.
இத்தேர்வில், தெலுங்கானா, குஜராத், கோவா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
நேற்று, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். ராஜஸ்தானை சேர்ந்த ஒரு இளைஞரை தேர்வு செய்யாததால் ஆத்திரமடைந்தார். இதனால், போலீஸ் பயிற்சி வளாகத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர் திடீரென கற்களை எடுத்து வீசினார். அங்கிருந்த மற்ற இளைஞர்கள் இதை தட்டிக்கேட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி இளைஞர்களை கலைத்தனர்.
இதையடுத்து, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் இருந்தும், 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கேரளாவை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.