/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலைக்கல்லுாரிகளில் கலைத்திருவிழா; மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
அரசு கலைக்கல்லுாரிகளில் கலைத்திருவிழா; மாணவ, மாணவியர் பங்கேற்பு
அரசு கலைக்கல்லுாரிகளில் கலைத்திருவிழா; மாணவ, மாணவியர் பங்கேற்பு
அரசு கலைக்கல்லுாரிகளில் கலைத்திருவிழா; மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : செப் 16, 2025 09:54 PM

- நிருபர் குழு -
அரசு கல்லுாரியில் நடந்த கலைத்திருவிழாவில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாநில அரசின் உயர்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவில், 170 அரசு கலைக்கல்லுாரிகளில் கலைத் திருவிழா நடத்த, நடப்பாண்டில் இரண்டு லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், 32 போட்டிகள் நடத்தப்படுகிறது. உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் நேற்று முதல் கலைத்திருவிழா துவங்கியுள்ளது. கல்லுாரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும், தலா ஒரு போட்டியில் பங்கேற்க வேண்டும்.
போட்டிகளில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோர் பல்கலை அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அதிலும் வெற்றிபெறுவோர் அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டிகளில் தேர்வாகின்றனர்.
கவிதை, பேச்சு, வலைஒலிப்பதிவு, வர்ணனை, பாட்டு, அலங்கார வடிவமைப்பு, தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நெருப்பில்லாமல் சமைத்தல், டிஜிட்டல் போஸ்டர் வடிவமைத்தல், தற்காப்பு கலை, சிறுகதை எழுதும் போட்டிகள் நடக்கிறது.
நேற்று துவங்கிய கலைத்திருவிழாவில், கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், இயற்பியல் துறை பேராசிரியர் அனீஸ்பாத்திமா, பேராசிரியர் மரகதவல்லி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
* வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இந்த கல்வி ஆண்டு முதல் 'கல்லுாரி கலைத்திருவிழா' துவங்கப்பட்டுள்ளது.நேற்று துவங்கிய கலைத்திருவிழா வரும், அக்., 10ம் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான நேற்று கவிதை, சிறுகதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
இன்று (17ம் தேதி) நடைபெறும் கலைத்திருவிழாவில், வர்ணணை, தனிப்பாடல், சொல்லிசை போட்டிகள் நடக்கிறது. நாளை (18ம் தேதி) பாடல்வரிகள் எழுதுதல், வாழ்க்கையின் இசை, வாத்திய இசை ஆகிய போட்டிகள் நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் ஜோதிமணி மற்றும், கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்கள் அனைவருக்கும், விழா இறுதி நாளில் பரிசுகள் வழங்கப்படும்.