/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயற்கை கருத்தரிப்பு; யாருக்கெல்லாம் சாத்தியம் பெண்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் மருத்துவ வல்லுனர்
/
செயற்கை கருத்தரிப்பு; யாருக்கெல்லாம் சாத்தியம் பெண்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் மருத்துவ வல்லுனர்
செயற்கை கருத்தரிப்பு; யாருக்கெல்லாம் சாத்தியம் பெண்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் மருத்துவ வல்லுனர்
செயற்கை கருத்தரிப்பு; யாருக்கெல்லாம் சாத்தியம் பெண்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் மருத்துவ வல்லுனர்
ADDED : செப் 07, 2025 02:39 AM

தாய்மை ஒரு வரம்! திருமணமான பெண்கள் ஒவ்வொருவரும் குழந்தை பெற்றுக் கொள்வதையே வெகுவாக விரும்புவர். குறிப்பிட்ட காலத்துக்குள் தாய்மை அடையாவிட்டால், அவர்களது மனம் படபடப்புக்குள்ளாகும். கருத்தரிப்பில் உடல் ரீதியாக உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணவே, இன்றைய மருத்துவ புரட்சியில், செயற்கை கருத்தரிப்பு நடைமுறை வந்திருக்கிறது.
செயற்கை கருத்தரிப்பு முறை குறித்து டாக்டர் சுகன்யா வெங்கடேஷ் பகிர்ந்தவை...
செயற்கை கருத்தரிப்பு முறையில் IVF, IUI, ICSI வித்தியாசம் என்ன? எப்போது , எந்த முறை பயன்படுத்தப்படுகிறது?
* தம்பதியர் குழந்தை பேறுக்கு தயாராக இருந்தும், விந்தணு தரம் குறைவு காரணமாக முடியாத நிலையில், கணவரின் விந்தணுக்கள் எடுக்கப்பட்டு, சுத்தப்படுத்தி, கர்ப்பப்பைக்குள் செலுத்துவது ஐ.யு.ஐ., முறை. இதற்கு, 5000-6000 ரூபாய் செலவாகும். இது செயற்கை கருத்தரிப்பு முறை அல்ல; இயற்கையாக கருத்தரிக்க துாண்டும் ஓர் முறை.
* ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ., என்பது செயற்கை கருத்தரிப்பு முறை; இதன் டெக்னிக்கல் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும். செயற்கை கருத்தரித்தல் என்பது கருமுட்டை, விந்தணுக்களை எடுத்து இரண்டையும் சேர்த்து வெளியே கருவை உருவாக்கி, நான்கு, ஐந்து நாட்கள் வளர்த்து கர்ப்பப்பைக்குள் வைப்பது. ஐ.வி.எப்., - ஐ.சி.எஸ்.ஐ., இரண்டிலும் செயல்முறைகளில் சில மாறுபாடுகள் இருக்கும்.
செயற்கை கருத்தரிப்பின் வெற்றி விகிதம் என்ன? வயது வெற்றியை எவ்வளவு பாதிக்கிறது?
வெற்றி விகிதம் என்பது 50 முதல் 60 சதவீதமே. 40 வயதுக்கு மேல், 20-30 சதவீதமாக குறைந்து விடும். இதற்கு தயாராகவே இச் சிகிச்சைக்கு வர வேண்டும். 100 சதவீத வெற்றி என்பது விளம்பரம் மட்டுமே; அதற்கு எங்கும் வாய்ப்பில்லை. இதன் வெற்றி என்பது கருமுட்டை, விந்தணுக்களின் தரத்தை பொறுத்தே உள்ளது.
செயற்கை கருத்தரிப்பு அனைவருக்கும் பொருந்துமா... பெண்களுக்கு ஹார்மோன் மருந்துகள் எடுப்பதால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?
செயற்கை கருத்தரிப்பு இயற்கையாக குழந்தை பேறு இல்லாத யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். உடல் ரீதியாக எந்த பிரச்னை இருந்தாலும், அதை சரிசெய்து, இம்முயற்சியை தொடரலாம். கரு உருவாகும்போது இயல்பாகவே பெண்கள் உடலில் சில ஹார்மோன் சுரக்கும்; செயற்கை கருத்தரிப்பு முறையில், அந்த ஹார்மோன்கள் செயற்கையாக ஊசி வாயிலாக செலுத்துகிறோம். இதில், பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
ஐ.வி.எப்., முறைக்கு தயாராகும் தம்பதியர், வாழ்க்கை முறையில் எத்தகைய மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும்?
வாழ்வியல் மாற்றங்கள் கட்டாயம் வேண்டும். எடை குறைப்பு, நல்ல சரிவிகித உணவு எடுத்தல், உடற்பயிற்சி இருந்தால் மட்டுமே கருமுட்டை, விந்தணுவின் தரத்தை மேம்படுத்த முடியும். புகைபிடித்தல், காபி, டீ, மது போன்ற பழக்கங்கள், பெண்களுக்கு மனஅழுத்தம், துாக்கமின்மை பிரச்னைகள் இருந்தாலும் வெற்றி சதவீதத்தை கட்டாயம் பாதிக்கும்.
இம்முறையில் அதிகளவில் இரட்டை குழந்தைகள் பிறப்பது, எதனால்?
வழக்கமாக பெண்களுக்கு ஒரு கருமுட்டை உருவாகி வெடித்து வருவது தான் மாதவிடாய் என்போம். செயற்கை முறையில், அதிக கரு முட்டை உருவாக மருந்து செலுத்தப்படுவதால், ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகள் உருவாகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக, கரு முட்டைகள் கர்ப்பப்பையில் மூன்று கூட வைப்போம். அதில் ஒன்று தங்காமல் இரண்டு குழந்தைகள் வளரவும், இரண்டும் தங்காமல் ஒரு குழந்தை வளரவும் வாய்ப்புண்டு. சிலருக்கு மூன்றும் தங்கி விடுவதால், மூன்று குழந்தைகள் கூட பலர் பெற்றுள்ளனர்.
செயற்கை கருத்தரிப்பு முறையில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து...
முன்பெல்லாம் செயற்கை கருத்தரிப்பு முறை மிகவும் சிரமமாகவும், அதிக செலவினம் ஏற்படுத்துவதாகவும் இருந்தது. 8-10 மாதங்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும். தற்போது அப்படி இல்லை. அலுவலகத்தில் விடுமுறை எடுக்கத் தேவையில்லை. கரு வளர ஊசி போடும்போதும்; கரு முட்டை எடுக்கும்போதும் மருத்துவமனைக்கு வந்து செயல்பாடுகள் முடித்து, உடனடியாக பணிக்கு திரும்பலாம். அதிக எடை துாக்குதல், பம்ப் தண்ணீர் அடித்தல் போன்ற கடினமாக வேலைகளை செய்ய வேண்டாம் என பரிந்துரைக்கிறோம். சிகிச்சை முறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் இருப்பதால், கரு ஐந்து நாட்கள் வளர்வதை 24 மணி நேரம் கண்காணித்து, சிறந்த தரம் கொண்டதை தேர்வு செய்து கர்ப்பப்பைக்குள் வைக்கலாம். பல தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, வளர்ச்சி வந்துள்ளதால் மிகவும் சுலபமாகியுள்ளது.
இச்சிகிச்சைக்கு காப்பீடு வசதி உள்ளதா
செயற்கை கருத்தரித்தல் முறைக்கு இன்சூரன்ஸ் வசதி இல்லை. ஆடம்பரமாக, பொழுதுபோக்கு சிகிச்சையாக பார்க்கின்றார்களா என தெரியவில்லை. இது, பெண்களுக்கு மிக முக்கியமான சிகிச்சை. கரு வளர்ப்பது, கருமுட்டை எடுத்து வளர்த்து வைப்பதற்கு, 1.75 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவாகும்.
சுவாரஸ்யமானதாக கருதும் நிகழ்வுகள் உள்ளதா...
ஆமாம்! தம்பதியர் சிகிச்சைக்கு வரும்போது, அதிக கருமுட்டைகள் உருவாக்கி, சேமித்து வைக்கப்படுகிறது. 10 ஆண்டுகள் கழித்தும், அக்கரு முட்டையை பயன்படுத்தி, குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். ஒரே சமயத்தில் உருவான கரு, நீண்ட ஆண்டுகளுக்கு பின், சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் தற்போது உள்ளனர்.
வாடகைத்தாய் என்பதற்கு யாரை பயன்படுத்தலாம்; சட்டம் என்ன சொல்கிறது?
செயற்கை கருத்தரிப்பு முறைக்கு, பெண்கள் 50 வயது வரை; ஆண்கள், 55 வயது வரை மட்டுமே செய்துகொள்ள முடியும். அதற்கு மேற்பட்ட வயது என்றால், நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். கர்ப்பப்பை இல்லாத பெண்கள், கர்ப்பம் ஆனால் இறக்கும் நிலையில் இதய கோளாறு, பிற நோய் உள்ளவர்கள், 10 முறை ஐ.வி.எப்., செய்து தோல்வியடைந்தவர்கள் மட்டுமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற முடியும். வாடகைத்தாயாக வருபவர்கள் சொந்தங்களாகவும், தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இம்முறையில் குழந்தை பிறந்தால் வாடகைத்தாய்க்கு குழந்தை மீதும், குழந்தைக்கு வாடகைத்தாய் மீதும் சட்ட ரீதியாக எவ்வித உரிமையும் இல்லை.