/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட் உத்தரவுப்படி எம்.ஜி.ஆர். சிலை அகற்றம் மாற்று இடத்தில் அமைக்க ஆலோசனை
/
கோர்ட் உத்தரவுப்படி எம்.ஜி.ஆர். சிலை அகற்றம் மாற்று இடத்தில் அமைக்க ஆலோசனை
கோர்ட் உத்தரவுப்படி எம்.ஜி.ஆர். சிலை அகற்றம் மாற்று இடத்தில் அமைக்க ஆலோசனை
கோர்ட் உத்தரவுப்படி எம்.ஜி.ஆர். சிலை அகற்றம் மாற்று இடத்தில் அமைக்க ஆலோசனை
ADDED : அக் 02, 2025 10:37 PM

பொள்ளாச்சி:கோர்ட் உத்தரவுப்படி, பொள்ளாச்சி அருகே, 31 ஆண்டுகளாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையை கட்சி நிர்வாகிகள் அகற்றினர்.
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தனிநபர் ஒருவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ஆக்கிரமிப்புகள் மற்றும் சூளேஸ்வரன்பட்டி எம்.ஜி.ஆர். சிலை, விநாயகர் கோவில்கள் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர், அ.தி.மு.க.,வினருக்கு நோட்டீஸ் அனுப்பி ஏழு நாட்களுக்குள் சிலையை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக அகற்றப்பட்டு, அதற்குண்டான நஷ்ட ஈட்டுத்தொகை வசூலிக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, அ.தி.மு.க., வினர் முன்வந்து, எம்.ஜி.ஆர்., சிலையை பாதுகாப்பாக அகற்றிக்கொண்டனர். போலீசார், போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சூளேஸ்வரன்பட்டி அ.தி.மு.க. பேரூராட்சி செயலாளர் நரிமுருகன் கூறியதாவது:
சூளேஸ்வரன்பட்டியில் கடந்த, 1995ம் ஆண்டு பிப்., 28ம் தேதி எம்.ஜி.ஆர்., சிலை ரோட்டோரம், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்பட்டது.
கடந்த, 31 ஆண்டுகளாக, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள், நினைவு நாள், கட்சி நிகழ்ச்சிகள், தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவோர், இச்சிலைக்கு மரியாதை செய்வது வழக்கம். அதே போன்று வெற்றி பெற்றாலும் சிலைக்கு மரியாதை செய்வர்.
இச்சூழலில், பொள்ளாச்சி - வால்பாறை ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற தனிநபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும், சிலையை அகற்றிக்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
கோர்ட் உத்தரவுப்படி, சிலையை அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாற்று இடம் குறித்து எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் என அனைவரும் ஆலோசித்து உரிய இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சூளேஸ்வரன்பட்டியில் இருந்த எம்.ஜி.ஆர். சிலை அகற்ற அமைதி பேச்சு நடத்தப்பட்டது. அதில், எம்.ஜி.ஆர். சிலை அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி தற்போது சிலையை கட்சியினரே முன்வந்து அகற்றிக்கொண்டனர்,' என்றனர்.