/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.223.07 கோடியில், 2,259 வீடுகள் தயாராகிறது! அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டுமானம் விறுவிறு
/
ரூ.223.07 கோடியில், 2,259 வீடுகள் தயாராகிறது! அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டுமானம் விறுவிறு
ரூ.223.07 கோடியில், 2,259 வீடுகள் தயாராகிறது! அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டுமானம் விறுவிறு
ரூ.223.07 கோடியில், 2,259 வீடுகள் தயாராகிறது! அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டுமானம் விறுவிறு
ADDED : நவ 08, 2024 11:58 PM

கோவை; அனைவருக்கும் வீடு திட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவை மாவட்டத்தில் ரூ.223.07 கோடியில், 2,259 வீடுகள் கட்டப்படுகின்றன. இப்பணிகளை, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று ஆய்வுசெய்தார்.
'அனைவருக்கும் வீடு' திட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவை மாவட்டத்தில், பன்னீர்மடை, செல்வபுரம் ஐ.யு.டி.பி., காலனி, மூங்கில்மடை, உக்கடம், சித்தாபுதுார், வெரைட்டி ஹால் ரோடு உட்பட, 11 இடங்களில், ரூ.307.68 கோடியில், 2,590 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இன்னும், எட்டு இடங்களில், 2,259 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகின்றன. நேதாஜிபுரத்தில் ரூ.62.53 கோடியில் 720 வீடுகள், தெற்கு பேரூர்-2 பகுதியில் ரூ.14.49 கோடியில் 144 வீடுகள், எழில் நகரில் ரூ.26.59 கோடியில், 288 வீடுகள், சுந்தரம் வீதியில் ரூ.7.70 கோடியில் 55 வீடுகள், சித்தாபுதுார் பகுதி-2ல் ரூ.14.72 கோடியில் 112 வீடுகள், பொள்ளாச்சி எம்.ஜி.ஆர்., நகரில் ரூ.45.98 கோடியில் 512 வீடுகள், அன்னுார் முல்லை நகர் ரூ.38.79 கோடியில் 348 வீடுகள், வால்பாறையில் ரூ.12.27 கோடியில் 80 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம், ரூ.223.07 கோடியில், 2,259 வீடுகள் கட்டப்படுகின்றன. இதுவரை, 395 பயனாளிகள் பங்களிப்பு தொகை செலுத்தியிருக்கின்றனர்.
ரூ.2.10 லட்சம் மானியத்தில் பயனாளிகளே சுயமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தில், 3,222 குடியிருப்புகளுக்கு, ரூ.67.66 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 2,796 பயனாளிகள் வீடுகள் கட்டியுள்ளனர். 403 பயனாளிகள் வீடு கட்டும் பணி முன்னேற்றத்தில் இருக்கிறது. இதுவரை பயனாளிகளுக்கு மானியமாக ரூ.61.82 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
கோவையில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று ஆய்வு செய்தார்.
தலைமை பொறியாளர் லால் பகதுார், நிர்வாக பொறியாளர் மாடசாமி ஆகியோர் திட்டப்பணிகள் தொடர்பாக விளக்கினர். பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்க, அமைச்சர் அறிவுறுத்தினார். அப்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனர் விஜயகார்த்திகேயன், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.