/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லஞ்சம் வாங்க ஆள் நியமித்த சார்பதிவாளர் துாக்கியடிப்பு
/
லஞ்சம் வாங்க ஆள் நியமித்த சார்பதிவாளர் துாக்கியடிப்பு
லஞ்சம் வாங்க ஆள் நியமித்த சார்பதிவாளர் துாக்கியடிப்பு
லஞ்சம் வாங்க ஆள் நியமித்த சார்பதிவாளர் துாக்கியடிப்பு
ADDED : அக் 09, 2024 07:24 AM

கோவை: கோவை மாவட்டம், அன்னுாரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக இருந்தவர் செல்வ பாலமுருகன். இவர், பத்திரம் பதிவு செய்வதற்கும், வில்லங்கச் சான்று வாங்க வருவோரிடமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. கடந்த ஜன., 22ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அதில், லஞ்சம் வாங்குவதற்காகவே, வாரச்சம்பளத்துக்கு ஒருவரை நியமித்திருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில், சோதனையை தீவிரப்படுத்தியபோது, ஏராளமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
லஞ்சமாக வசூலிக்கும் தொகையை, கார் டிரைவர் மூலம் வங்கிகளில் செலுத்துவது தெரியவந்தது. கார் டிரைவர் மற்றும் சார்பதிவாளர் பயன்படுத்திய, மொபைல் போன்களில் இருந்த உரையாடல்களின் 'ஸ்கிரீன் ஷாட்', விசாரணை ஆவணமாக எடுக்கப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகளாக, 264 எண்ணிக்கையில், ரூ.1.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு எதிரே உள்ள, பத்திரம் எழுதும் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் தலா ரூ.1,000 வீதம் சார்பதிவாளருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமென கூறினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார்பதிவாளர் செல்வ பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து, அதன் அறிக்கையை பத்திரப்பதிவு துறைக்கு அனுப்பினர்.
இச்சம்பவம் நடந்து எட்டு மாதங்களாகியும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரப்பதிவு துறை உயரதிகாரிகள் கிடப்பில் போட்டனர். இதுதொடர்பாக, அக்., 2ல் நமது நாளிதழில், விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, சார்பதிவாளர் செல்வ பாலமுருகன், நாகப்பட்டினத்துக்கு துாக்கியடிக்கப்பட்டார். அம்மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில், அவரை வழிகாட்டி சார்பதிவாளராக நியமித்து, பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் நேற்று, உத்தரவு பிறப்பித்துள்ளார்.